'முட்டை வாங்கும்போது கவனம்': உணவு பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

தினமலர்  தினமலர்
முட்டை வாங்கும்போது கவனம்: உணவு பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

பல்லடம்:பழுப்பாக இருப்பதெல்லாம் நாட்டுக்கோழி முட்டை என்று எண்ணி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,' என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், பல்லடத்தை அடுத்த புளியம்பட்டியில் உள்ள முட்டை கோழி பண்ணை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது:பொதுவாகவே, முட்டை உற்பத்தி பண்ணைகளில், இரண்டு விதமான முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் முட்டைகள், ஒன்று வெள்ளை நிறமாகவும், மற்றொன்று பழுப்பு நிறத்திலும் இருக்கும்.இரண்டு முட்டைகளும் ஒரே வகையை சேர்ந்தவை. வெள்ளை நிறமுட்டை, 5 ரூபாய்க் கும், பழுப்பு நிறத்தில் இருப்பது நாட்டுக்கோழி முட்டை என்றும் கூறி, 10 முதல் 25 ரூபாய் வரையும் விற்பனை செய்கின்றனர்.
நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்பனை செய்யப்படும் முட்டை, 55 முதல் 60 கிராம் வரை எடையும், அவற்றின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.ஆனால், ஒரிஜினல் முட்டை, 30 முதல் 35 கிராம் அளவில் சிறியதாகவும், மஞ்சள் கரு நல்ல மஞ்சள் நிறத்திலும், முட்டை ஓடு சற்று கடினமாகவும், வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். எனவே, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மணி, தங்கவேல், மற்றும் கேசவராஜ் உடனிருந்தனர்.

மூலக்கதை