கேப்டனாக தோனி தேர்வு: மைக்கேல் ஹசி ‘லெவன்’ அணிக்கு | ஜூலை 04, 2020

தினமலர்  தினமலர்
கேப்டனாக தோனி தேர்வு: மைக்கேல் ஹசி ‘லெவன்’ அணிக்கு | ஜூலை 04, 2020

புதுடில்லி: மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல்., ‘லெவன்’ அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் கொரோனா அச்சம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, ஐ.பி.எல்., ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இதில், 8 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

துவக்க வீரர்களாக ரோகித் சர்மா (மும்பை), டேவிட் வார்னர் (ஐதராபாத்) வாய்ப்பு பெற்றனர். அடுத்த இரு இடங்களுக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் தேர்வாகினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி (சென்னை) இடம் பிடித்துள்ளார். இவரே இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘ஆல்–ரவுண்டர்’ இடத்துக்கு ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ஆன்ட்ரி ரசல் (கோல்கட்டா) தேர்வு செய்யப்பட்டனர். ‘சுழல்’ வீரர்களாக ரஷித் கான் (ஐதராபாத்), யுவேந்திர சகால் (பெங்களூரு) இடம் பிடித்தனர். வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்), ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) தேர்வாகினர்.

நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே இடம் என்பதால் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), லசித் மலிங்கா (மும்பை), சுனில் நரைன் (கோல்கட்டா) தேர்வு செய்யப்படவில்லை. தவிர, 12வது வீரராக லோகேஷ் ராகுல் (பஞ்சாப்) இடம் பிடித்துள்ளார்.

‘லெவன்’ அணி: ரோகித், வார்னர், கோஹ்லி, டிவிலியர்ஸ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரசல், ரஷித் கான், சகால், புவனேஷ்வர், பும்ரா. 12வது வீரர்: ராகுல்

மூலக்கதை