ஜெய்ப்பூரில் பிரமாண்ட மைதானம்: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு | ஜூலை 04, 2020

தினமலர்  தினமலர்
ஜெய்ப்பூரில் பிரமாண்ட மைதானம்: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு | ஜூலை 04, 2020

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்ட ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம் உள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் (ஆர்.சி.ஏ.,) சார்பில் இயங்கும் இம்மைதானத்தில் 30 ஆயிரம் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது. இந்நிலையில், 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதியுடன் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஜெய்ப்பூரில் கட்டுவதற்கு ஆர்.சி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஆமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் (1.10 லட்சம் இருக்கைகள்), மெல்போர்ன் கிரிக்கெட் (1.02 லட்சம்) மைதானங்களுக்கு பின், உலகின் 3வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படும்.

ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் டில்லி செல்லும் நெடுஞ்சாலையில் 100 ஏக்கரில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு, உள்ளரங்கு விளையாட்டு மைதானம், பயிற்சி கூடங்கள், கிளப் மற்றும் 4,000 வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி, ரசிகர்களுக்கான உணவகங்கள், வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதி, 250 பேர் அமரக்கூடிய செய்தியாளர்கள் அறை கட்டப்பட உள்ளது. தவிர, 2 பயிற்சி மைதானம் இடம் பெறுகிறது. இதில் ரஞ்சி போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்.

இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த 4 மாதங்களில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை