ரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்

தினமலர்  தினமலர்
ரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரபல ரவுடி விகாஷ் துபே மீது, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்பட, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.துபேயை பிடிப்பதற்காக, கான்பூர் அருகேயுள்ள கிராமத்துக்கு, நேற்று முன்தினம் போலீசார் சென்றனர்.அப்போது, உயரமான கட்டடத்தில் பதுங்கியிருந்த விகாஷ் துபே, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டதில், ஒரு டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உட்பட எட்டு போலீசார் பரிதாபமாக இறந்தனர்.படுகாயம் அடைந்த மேலும் ஏழு போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உ.பி., முழுதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே, போலீசாரின் நடவடிக்கை குறித்து, கான்பூர் ஐ.ஜி., மோஹித் அகர்வால் கூறியதாவது:

விகாஷ் துபேயையும்,அவரது ஆதரவாளர்களையும் பிடிக்க, 26 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், உ.பி.,யின் பல்வேறு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும் சில போலீசார், பக்கத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். விகாஷ் துபேயை விரைவில் கைது செய்வோம். அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. துபே பற்றி தகவல் தருவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளோம்.
சந்தேகத்திற்குரிய, 500 மொபைல் போன் எண்களை கண்காணித்து, அவற்றுக்கு வரும் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

விகாஷ் துபே வீடு தரைமட்டம்இந்நிலையில் லக்னோவில் உள்ள துபேயின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தினர் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். அங்கு நின்றிருந்த இரண்டு சொகுசு கார்களும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. , சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்இதற்கிடையே, தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரி வினய் குமார், 50, நேற்று அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். போலீசார் மீது ரவுடிகள் நடத்திய தாக்குதலுக்கு, இவர் மறைமுகமாக உதவியிருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆனாலும், எதற்காக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ரவுடிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீசாரின் உடல்கள், நேற்று அவர்களது சொந்த ஊர்களில் தகனம் செய்யப்பட்டன.

மூலக்கதை