வேலை பறிபோச்சு... செலவுக்கு காசில்லாமல் திண்டாட்டம் பிஎப் பணத்தை கரைத்த அவலம்

தினகரன்  தினகரன்
வேலை பறிபோச்சு... செலவுக்கு காசில்லாமல் திண்டாட்டம் பிஎப் பணத்தை கரைத்த அவலம்

புதுடெல்லி: பலருக்கு வேலை போய் விட்டது; பலருக்கு வேலை இருந்தாலும், பாதி சம்பளம் தான். இப்படி லட்சக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கைகொடுப்பது பிஎப் பணம் தான். கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 3 லட்சம் பேருக்கு மேல் பிஎப் பணத்தை கரைத்திருப்பது தெரியவந்துள்ளது. பிஎப் - சேம நல நிதி. தொழிலாளர், ஊழியர்கள் வாழ்க்கையில் பெரிதும் பயன்படுவது; குடும்பத்தில் திருமணம் , பிள்ளைகள் கல்வி, மருத்துவ செலவு, வீடு வாங்க என்று பல வகையிலும் கைகொடுப்பது பிஎப் தான். ஆனால், இப்போது வாழ்க்கையில் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே பயன்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதலே பல லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து பல மாநிலங்களில் பொது ஊரடங்கு போட்டு விட்டதால் அவர்களால் எங்கும் வேலைக்கு போக முடியவில்லை. மேலும், கையில் உள்ள சேமிப்பு பணம் எல்லாம் கரைந்து போய் விட்டது. அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரே வழி, பிஎப் பணத்தை எடுப்பது தான். வாழ்க்கையில் அவசர தேவைக்காக, முக்கிய செலவுக்காக சேமித்த பிஎப் பணம் தான் இப்போது வாழ்க்கைக்கு அன்றாட செலவுக்கு கைகொடுக்கும் என்று முடிவு கட்டினர். முன்பு போல இல்லாமல் ஆன்லைனில் பணத்தை எடுக்க முடியும் என்பதால் பலரும் அவசர அவசரமாக தினமும் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பிஎப் பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி முதல் இதுவரை சராசரியாக வாரத்துக்கு லட்சம் பேர் பணத்தை எடுத்து வருகின்றனர். இதுவரை 5.8 லட்சம் பேர் மொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிஎப் பணத்தை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 9 ம் தேதியில் இருந்து மாதக்கடைசி வரை மட்டும் 20 லட்சம் பேர் பணத்தை எடுத்துள்ளதாக பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ செலவுக்கு குறிப்பாக கொரோனா பாதிப்புள்ளவர்கள் என்று கணக்கிட்டால் 40 சதவீதம் பேர் இருப்பர். ஆனால், 60 சதவீதம் பேர் கொரோனா அல்லாத தேவைகளுக்கு தான் பணத்தை எடுக்க விண்ணப்பித்து இருந்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் மேலும் கூறியதாவது: பெரும்பாலும் 15 ஆயிரம் ரூபாய் கீழ் சம்பளம் வாங்குவோர் தான், அதாவது, மொத்தத்தில் 75 சதவீதம் பேர் மிக அதிக அளவில் பிஎப் பணத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் பிஎப் பணத்தை எடுக்கும் சதவீதம் குறைவு தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் என்று பார்த்தால் 2 சதவீதம் பேர் தான் பிஎப் பணத்தில் எடுத்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலை என்பதால் ஊழியர்கள், தொழிலாளர்கள் விண்ணப்பித்ததும் உடனுக்குடன் பணத்தை பட்டுவாடா செய்து வருகிறோம். கிட்டத்தட்ட கணிசமான சம்பளம் வாங்குவோரில் 15 லட்சம் பேர் பிஎப் பணத்தை எடுத்துள்ளனர். இவர்களுக்கு வேலை பறிபோயிருக்கலாம்; சம்பளம் குறைந்திருக்கலாம். அதனால் நெருக்கடியான சமயத்தில் பிஎப் தான் கைகொடுத்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 மாதத்தில் 60 லட்சம் தொழிலாளர்கள் நடவடிக்கை 15,000 கோடி ரூபாய் வரை இதுவரை பட்டுவாடா சேமநல நிதி தான் இப்போது வாழ்வாதாரம்

மூலக்கதை