கொரோனா வைரஸ் எப்படி உருவானது ? : ஆய்வு நடத்த அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு!!

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் எப்படி உருவானது ? : ஆய்வு நடத்த அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு!!

ஜெனீவா : கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது. மனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள உயிர்கொல்லி கொரோனா வைரஸ், சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகானில் நகரின் இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக தோன்றியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து  அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் வூகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.இதற்கிடையே கொரோனா வைரஸ் வூகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டது. ஆனால் அமெரிக்க படை வீரர்கள்தான் இந்த வைரசை சீனாவில் கொண்டு வந்து விட்டதாக சீனா குற்றம் சாட்டுகிறது. இதனை அமெரிக்கா நிராகரித்தது. இப்போது இந்த வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனம் தனது வல்லுனர் குழுவை அடுத்த வாரம் சீனாவுக்கு அனுப்புகிறது. இந்த வைரசின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வருகிறது.இந்த வைரஸ் எப்படி பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் அதற்கு எதிராக சிறப்பாக போராட முடியும். இந்தக் குழு, கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, விலங்குகள் மூலமாக மனிதர்களிடம் தொற்று வந்ததா? அல்லது வெளவால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளது. 

மூலக்கதை