தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

* பால், மருந்துகடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி
* நாளை மறுநாள் முதல் சென்னை உள்பட எல்லா நகரங்களுக்கும் தளர்வு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும்  நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை பால், மருந்து கடைகள், பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மருத்துவ சேவை சார்ந்த வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.

இதனால் பெரும்பாலான கடைகள் திறக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1385 பேர் மரணம் அடைந்துள்ளனர். 42 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதைத்தவிர்த்து ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி 5, 12, 19,26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

இந்த உத்தரவின்படி இந்த மாதத்திற்கான முதல் முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லை. பால் மற்றும் மருந்து கடைகள், பத்திரிகை விற்பனையகம் மட்டும் இயங்கலாம்.

அரசு அனுமதி அளித்துள்ள வாகனங்கள் மற்றும் பால் மற்றும் மருத்துவ பணிகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் இயங்கலாம். பொதுமக்கள் மருத்துவ தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும்.   வேறு ஏதற்காகவும் வெளியே வரக்கூடாது.

இதை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நடந்து செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள் தடுப்புகள் அனைத்து அடைக்கப்படும். விதிகளை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுவார்கள்.

இதற்காக சம்பந்தபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும்.

சென்னையின் அனைத்து சாலைகளும் தடுப்புகள் அமைத்து மூடப்படும். குறிப்பாக சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும்  இவற்றை இதனை இணைக்கும் சாலைகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

மேலும் நகரின் உள்பகுதிகளில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இதைத்தவிர்த்து “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களையும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள் மற்றும் மதுரையில் அமலில் இருந்த முழு ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இதனைத் ெதாடர்ந்து வரும் 6ம் தேதி முதல் அனைத்து பணிகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்கலாம்.

மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். உணவகங்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தலாம்.

தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண வேண்டும்.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு இயக்க வேண்டும்.

ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம். இதைத்தவிர்த்து சென்னை காவல் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கேவில்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

இதன்படி பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

.

மூலக்கதை