எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு!!

தினகரன்  தினகரன்
எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு!!

மும்பை : மகாராஷ்டிராவில் ஒருவர், கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க, உலகின் முதல் விலை உயர்ந்த முகக் கவசம் செய்து அணிந்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. கொரோனாவை தடுக்க அத்தியாவசியமான ஒன்றான மாஸ்க், பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. சிலர் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்துவதை காண முடிகிறது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். புனே மாவட்டம் அடுத்த பிம்பிரி பகுதியில் வசிக்கும் செல்வந்தர் சங்கர் குராடே,  கை, கழுத்து, விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிபவர் ஆவார். அவர் சமூக வலைதளத்தில், காப்பரால் ஆன முககவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து அதே போன்று தங்கத்தால் முககவசம் அணிய வேண்டும் என ஆசை கொண்ட சங்கர் குர்காடே, தங்க வியாபாரி ஒருவரை அணுகி உள்ளார். அவரும் சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் மாஸ்க் செய்து கொடுத்துள்ளார். இந்த முகக்கவசம் சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும் முகக்கவசத்தில் நுண்ணிய துளைகள் உள்ளதாகவும் சங்கர் குராடே கூறுகிறார்.  தனக்கு தங்கத்தின் மேல் எப்போது அளவில்லா பிரியம் இருப்பதாக தெரிவிக்கும் சங்கர் குர்காடே, அதன் காரணமாகவே இந்த முக கவசத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மாஸ்க் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் இணையவாசிகள்.

மூலக்கதை