கொரோனா குறித்து எச்சரிக்காத சீனா

தினமலர்  தினமலர்
கொரோனா குறித்து எச்சரிக்காத சீனா

ஜெனிவா: கொரோனா வைரஸின் ஆரம்பகட்டம் குறித்த தனது அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் புதுப்பித்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்தது சீனாவில் உள்ள தங்கள் அலுவலகம் தான் என்றும், சீனா எச்சரிக்கவேயில்லை என்றும் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் விஷயத்தில் உரிய நேரத்தில் தகவல்களை அளித்து தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியாதாகவும், சீனாவுக்கு ஆதரவான மனநிலையில் செயல்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த பல ஆயிரம் கோடி நிதியையும் நிறுத்தினார். சீனாவுக்கு ஆதரவு என்ற இந்த குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்து வந்தது.


இந்த விமர்சனத்திற்கு பதில் கூறும் வகையில், தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் சீனாவுடனான தனது தகவல் தொடர்புகளை பற்றிய விவரங்களை ஏப்ரல் 9 அன்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31 அன்று நிமோனியா நோய்களைப் பதிவு செய்ததாக கூறியிருந்ததது. ஆனால் அந்த அறிக்கை சீன அதிகாரிகளால் அனுப்பப்பட்டதா அல்லது வேறு மூலமாக வந்ததா என்ற தகவலை குறிப்பிடாமல் இருந்தது.


இந்த வாரம் அந்த தகவல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவலின் படி சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவன மண்டல அலுவலகம் தான் டிசம்பர் 31 அன்று 'கண்டறியப்படாத காரணம் மூலம் நிமோனியா காய்ச்சல் பரவுவதாக' அறிவித்துள்ளது. சீனா அதுவரை வைரஸ் பற்றி வாய் திறக்கவேயில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. பின்னர் அது பற்றிய தகவல்களை சீன அதிகாரிகளிடம் ஜனவரி முதல் தேதி மற்றும் 2-ம் தேதி என இரண்டு முறை கேட்ட பிறகு, ஜன., 3-ம் தேதி சீனா தரப்பிலிருந்து தகவல்களை வழங்கியுள்ளனர்.

மூலக்கதை