அடிமேல் அடி வாங்கும் மும்பை மக்கள்; கொரோனா தொற்றுக்கு மத்தியில் கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தினகரன்  தினகரன்
அடிமேல் அடி வாங்கும் மும்பை மக்கள்; கொரோனா தொற்றுக்கு மத்தியில் கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மும்பை: கொரோனா தொற்றுக்கு மத்தியில் மும்பையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 3 முதல் 4 வரை மும்பை, ரைகாட் மற்றும் ரத்தனகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஹோசாலிகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மும்பையில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார். பால்கர், மும்பை, தானே, ரைகாட் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என்பதால்  கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை