சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

தினமலர்  தினமலர்
சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

வாஷிங்டன்: உலக வரலாற்றில் 2020ம் ஆண்டுக்கு தனித்த இடமுண்டு. குறிப்பாக, கொரோனா வைரஸ், பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுப்பு என, இந்தாண்டின் ஒவ்வொன்றும் நிகழ்வும் அதிர்ச்சி தரும் சம்பவங்களாகவே உள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது ஒரு வீடியோவும் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனையே கவ்விச் செல்வது வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால், கடந்த இரு நாட்களாக, உண்மையிலேயே சுறா மீனைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என, விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.





இந்த வீடியோவை, கெல்லி புர்பாஜ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர், 'கழுகா... பருந்தா... மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தச் செல்லும் பறவை எது' என்ற கேள்விகளுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வரை, 16.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, கருத்திட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.





டிராக்கிங் சார்க்ஸ் (Tracking Sharks) எனும் டுவிட்டர் கணக்கும், இந்த வீடியோவைப் பகிர்ந்து, 'சுறா மீனை கவ்விச் செல்லும் இந்த பறவையின் பெயர் என்னவென்பது யாருக்காவது தெரியுமா?' எனக் கேள்வி கேட்டுள்ளது. அதற்கு சிலர், 'இயற்கை விந்தை' எனப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். சிலரோ, மீன்களைச் சாப்பிட்டு உயிர் வாழும் 'ஓஸ்ப்ரே' (Osprey) என்னும் பறவை தான் இது எனத் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை