அமெரிக்காவில் இன்றும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் இன்றும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, இன்றும்(ஜூலை 4) 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக டிரம்பின் கோபம் சீனா மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில், நேற்று முன்தினம் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிய உச்சமாக 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில் தொடர்ந்து, 3வது நாளாக இன்றும், 54 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 54,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு 28,90,428 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 616 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,32,101 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பிலிருந்து இதுவரை 12.11 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 15.47 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை