எனது சகோதரர் சகால்: குல்தீப் யாதவ் பாராட்டு | ஜூலை 03, 2020

தினமலர்  தினமலர்
எனது சகோதரர் சகால்: குல்தீப் யாதவ் பாராட்டு | ஜூலை 03, 2020

புதுடில்லி: ‘‘சகால் என்னிடம் சகோதரர் போல பழகுவார். இது போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது.,’’ என, குல்தீப் யாதவ் தெரிவித்தார்.

இந்திய ‘சுழல்’ வீரர் குல்தீப் யாதவ் 25. இதுவரை 6 டெஸ்ட் (24 விக்கெட்), 60 ஒருநாள் (104), 21 சர்வதேச ‘டுவென்டி–20’ (39) போட்டிகளில் விளையாடி உள்ளார். சமீபகாலமாக இவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. கடந்த ஐ.பி.எல்., மற்றும் 2019 உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இதுகுறித்து குல்தீப் கூறியது: 

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., தொடர் மோசமாக இருந்தது. இதில் இருந்து மீள, உலக கோப்பை தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகினேன். ஆனால் இதிலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது. 

தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அணியில் வருவதும், போவதுமாக இருந்தால் நெருக்கடி தான் ஏற்படும். 

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோருக்கு பந்துவீசுவது மிகவும் சவாலானது. சகவீரர் யுவேந்திர சகால், என்னிடம் சகோதரர் போல பழகுவார். இதனால் எங்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டது. இது போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது.

விக்கெட் கீப்பராக தோனி இருந்த போது ‘பீல்டிங்’ வியூகம் வகுப்பது எனக்கு எளிதாக இருந்தது. ஆடுகளத்தை நன்கு அறிந்து வைத்துள்ள இவர், தேவைக்கு ஏற்ப ‘பீல்டர்கள்’ மற்றும் பவுலர்களை மாற்றுவார். போட்டியின் போது பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப எப்படி பந்துவீசுவது என்பதை கற்றுக் கொடுத்தார். இதனால் நம்பிக்கையுடன் பந்துவீச முடிந்தது. 

இவ்வாறு குல்தீப் கூறினார்.

மூலக்கதை