போதிய ஆதாரம் இல்லை: இலங்கை போலீசார் கைவிரிப்பு | ஜூலை 03, 2020

தினமலர்  தினமலர்
போதிய ஆதாரம் இல்லை: இலங்கை போலீசார் கைவிரிப்பு | ஜூலை 03, 2020

கொழும்பு: உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததற்கு போதிய ஆதாரம் இல்லை என, இலங்கை போலீசார் தெரிவித்தனர். 

இந்தியாவில், 2011ல் நடந்த உலக கோப்பை பைனலில் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே புகார் தெரிவித்தார். இதுகுறித்து, அப்போதைய இலங்கை தேர்வுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, கேப்டன் சங்ககரா, துவக்க வீரர் உபுல் தரங்கா மற்றும் ஜெயவர்தனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முடிவில் சூதாட்டப் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என, தெரியவந்தது. 

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ஜெகத் பொன்சேகா கூறுகையில், ‘‘உலக கோப்பையில் பங்கேற்ற மூன்று வீரர்கள், தேர்வுக்குழு தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சூதாட்டம் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த புகாருக்கு ஐ.சி.சி.,யும் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே விசாரணையை கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டது,’’ என்றார்.

ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்பு குழு பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், ‘‘உலக கோப்பை பைனல் குறித்து எவ்வித சந்தேகமும் எங்களுக்கு எழவில்லை,’’ என்றார்.

மூலக்கதை