தொழிலாளர் போராட்டம் பிரதமர் ராஜபக் சே சமரசம்

தினமலர்  தினமலர்
தொழிலாளர் போராட்டம் பிரதமர் ராஜபக் சே சமரசம்

கொழும்பு; இலங்கையின் கிழக்குப் பகுதியில், ஆழ்கடல், 'கன்டெய்னர்' கையாளும் முனையம் அமைப்பதில், இந்தியாவின் தலையீட்டை எதிர்த்து, துறைமுக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், பிரதமர், மஹிந்தா ராஜபக் சே நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது.

அண்டை நாடான இலங்கையின் கிழக்குப் பகுதியில், கப்பல்களின், 'கன்டெய்னர்'களை கையாள்வதற்கான, மிகப்பெரிய ஆழ்கடல் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர், சிறிசேனா தலைமையிலான அரசு, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பங்களிப்புடன், இந்த முனையத்தை அமைப்பதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.

இந்த முனையத்தின் அருகில், சீனா தரப்பில் நிர்வகிக்கப்படும், சர்வதேச கன்டெய்னர் முனையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், கிழக்குப் பகுதியில், புதிய முனையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. இதற்கிடையே, இந்த முனையத்தை அமைக்கும் பணிகளை, சீனாவிடம் கொடுத்து விட வேண்டாம் என இந்தியா நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.இதையடுத்து, இந்தியா வின் தலையீடு இல்லாமல், 100 சதவீதம், இலங்கை தரப்பில் முனையத்தை அமைக்க வேண்டும் என கூறி, கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை, நேற்று முன்தினம் துவங்கினர்.இதையடுத்து, துறைமுக தொழிற்சங்கத்தினருடன், பிரதமர், மஹிந்தா ராஜபக் சே, நேற்று, தன் இல்லத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் முடிவில், போராட்டத்தை கைவிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 'இந்த பிரச்னையில், பிரதமரின் தலையீடு, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 'அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில், எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் என, நம்புகிறோம்' என கூறினர்.

இதற்கிடையே, துறைமுக பொறுப்பு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு கன்டெய்னர் கையாளும் முனையத்திற்காக, சீனாவில் இருந்து இறக்குமதியான, பெரிய அளவிலான மூன்று, 'கிரேன்'களை, கிழக்கு பகுதியில், புதிய முனையம் உருவாகும் துறைமுகத்தில் அமைக்க, பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.இது, 'புதிய முனையம் அமைக்கும் பணிகளில், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பங்களிப்பை விலக்குவதில், எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை