அசத்தல்! ஆன்லைன் சேவையில் போக்குவரத்து துறை...கொரோனா காலத்தில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி

தினமலர்  தினமலர்
அசத்தல்! ஆன்லைன் சேவையில் போக்குவரத்து துறை...கொரோனா காலத்தில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி

புதுச்சேரி : பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான சூழலில், போக்குவரத்து துறை அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக வழங்கி முன்னோடியாக திகழ்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது; பொது இடங்களுக்கு சென்றால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்த நெருக்கடியான சூழல் எப்போது மாறும் என்பது தெரியவில்லை. இதனால், மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அரசின் துறைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, முழுவதுமாக ஆன் லைன் சேவைக்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகி விட்டது.இந்த விஷயத்தில் போக்குவரத்து துறை தொலைநோக்கு பார்வையுடன் முக்கியமான சேவைகள் அனைத்தையும் ஆன் லைன் மூலமாக வழங்கும் பணிகளை ஏற்கனவே துவக்கி விட்டது.

தற்போது, 90 சதவீத சேவைகள் ஆன் லைன் மூலமாகவே வழங்கப்பட்டு முன்னோடியாக திகழ்கிறது.நடையாய் நடக்க வேண்டாம். கடந்த காலங்களில் லைசன்ஸ், எல்.எல்.ஆர்., பெறுவது, புதுப்பிப்பது, முகவரி மாற்றம், திருத்தம் செய்வது போன்ற சேவைகளுக்கு, போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் பெற வேண்டும்.பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்து, கட்டணம் செலுத்த வேண் டும். போட்டோ எடுப்பதற்கு, தேர்வுக்கு என பலமுறை போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். தற்போது, ஆன் லைனில் விண்ணப்பித்து, ஆன் லைனிலேயே பணத்தை செலுத்திவிட்டு, பிரிண்ட் எடுத்து சென்றல் போதும்.


எல்.எல்.ஆர்., என்றால் எழுத்து தேர்வு எழுதவும், லைசன்ஸ் என்றால் ஓட்டி காண்பிக்கவும் ஒருமுறை நேரில் சென்றால் போதும்.தேர்வுக்கு கட்டுப்பாடுதற்போது, ஆன் லைன் மூலமாக லைசன்ஸ், எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிக்கும் அனைவரையும், கொரோனா பீதியால் ஒரே நாளில் அழைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, புதுச்சேரி, உழவர்கரை போக்குவரத்து அலுவலகங்களில் 5 பேர் கொண்ட 4 குழுவாக தலா 20 பேர் அழைக்கப்படுகின்றனர். அதுபோல, வில்லியனுார், பாகூர் அலுவலகங்களில் தலா 10 பேர் அழைக்கப்படுகின்றனர்.லைசன்ஸ் பெற வாகனத்தை ஓட்டி காட்டுவதற்கு வருபவர்களும், எல்.எல்.ஆர்., பெற ஆன் லைன் தேர்வு எழுத வருபவர்களும் முக கவசம் அணிந்து, சானிடைசர் மூலமாக கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. கூட்ட நெரிசல் குறையும் அதுபோல, புதிய வாகனங்களை புதிவு செய்வது, வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், ரத்து செய்வது, முகவரி மாற்றம், எப்.சி., எடுப்பது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன் லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது.சாலை வரியை ஆன் லைனில் செலுத்துவதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பஸ்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்தால் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பிறகு, போக்கு வரத்து அலுவலக வளாகத்தில் உள்ள கட்டண மையத்தை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் சேவைகளால் கால தாமதம் தவிர்க்கப்படுவதுடன், போக்குவரத்து அலுவலகத்தில் எதிர்காலத்தில் கூட்ட நெரிசல் பெரிதும் குறைந்து விடும் என்பது நிச்சயம்.

மூலக்கதை