அவலம்! 'டாஸ்மாக்'கில் சமூக இடைவெளி பின்பற்றாத... குடிமகன்களால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
அவலம்! டாஸ்மாக்கில் சமூக இடைவெளி பின்பற்றாத... குடிமகன்களால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு

கடலுார் : கடலுார் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் குடிப்பிரியர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூடுவதாலும், ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதாலும் நோய் தொற்று அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், 43 நாட்களுக்கு பிறகு மே மாதம் 7ம் தேதி திறக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என, இரண்டே நாளில் மீண்டும் மூடப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக் சார்பில் மேல்முறையீடு செய்ததில், மதுபான கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதுடன், மது விற்பனை மற்றும் விநியோகத்தை முறைபடுத்த தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை, பாதுகாப்பு, சமூக இடைவெளி குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோர்ட் கூறியது.

அதன்படி, கடந்த மே மாதம் 16ம் தேதி முதல் கடலுார் மாவட்டத்தில் 126 மது கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. கடை திறந்த ஆரம்பத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் டோக்கன் வழங்கி, சமூக இடைவெளியில் உட்கார வைத்து, 10 நபர்களாக வரிசையில் நிற்க வைத்து மதுபானம் வழங்கப்பட்டது. போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் அதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது இந்த நடைமுறைகள் இல்லை. கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், வாகனங்கள் பறிமுதல், விதிமீறும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நோய் பரவும் அபாயம்ஆனால், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டமாக சரக்கு வாங்கி, சேர்ந்து குடிப்பது வரை சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. டாஸ்மாக் அருகே உள்ள பாஸ்ட் புட் உணவகங்கள், தள்ளுவண்டி உணவகங்களில் கூட்டமாக கூடுவது, டாஸ்மாக் கடைகளுக்கு அருகே இரவு நேரங்களில் இருட்டு பகுதியிலும் நின்று மது அருந்தும் நிலை உள்ளது.

இதனால், மாவட்டத்தில் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகள் செய்து வரும் நிலையில், டாஸ்மாக்கில் கூடுவதை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும்.

மூலக்கதை