உபி.யை உலுக்கிய அடுத்த அட்டூழியம் ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்துக் கொன்ற மருத்துவமனை: ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து சாவு

தினகரன்  தினகரன்
உபி.யை உலுக்கிய அடுத்த அட்டூழியம் ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்துக் கொன்ற மருத்துவமனை: ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து சாவு

அலிகர்: உத்தரப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் நுழைவு கட்டணமாக ரூ.4 ஆயிரம் செலுத்தாத நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் அடித்து கொன்றனர். உத்தர பிரதேசத்தில் நடக்காத குற்றங்களே இல்லை என்பதுபோல், தற்போது பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற 8 போலீசாரை ரவுடிகள் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், ரூ.4000 கட்டணம் செலுத்தாத நோயாளியை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுல்தான்கான் (44) என்பவர் கடந்த வியாழன்று வந்தார். அவர் கடுமையான வயிற்று வலியால் துடித்தார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.4,000 கட்டணம் என்றனர். அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என சுல்தான் குடும்பத்தினர் கூறி விட்டனர். பின்னர், வயிற்று வலிக்கான  மருந்து, மாத்திரைகள் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர் செலுத்தினர். ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால், அதற்கானஅனுமதி கட்டணமாக ரூ.4,000 செலுத்தியே தீர வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, சுல்தான் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். இதனால், மருத்துவமனை ஊழியர்கள் ஆத்திரமடைந்து, சுல்தானை தடியால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசில் சிசிடிவி ஆதாரத்துடன், சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை