ஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கடந்த மாதம் மட்டுமே 2,043 புகார்கள்

தினகரன்  தினகரன்
ஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கடந்த மாதம் மட்டுமே 2,043 புகார்கள்

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள்  பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இது, கடந்த 8 மாதங்களை காட்டிலும் அதிகமாகும். இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ‘‘ஜூன் மாதத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பெண்களை உணர்வுப்பூர்வமாக துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக 603 புகார்கள் வந்துள்ளன. குடும்ப வன்முறை தொர்பாக 452 புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்தம் 2379 புகார்கள் பெறப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அதிக புகார்கள் ஜூன் மாதத்தில் தான் பெறப்பட்டுள்ளது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக புகார்கள் பெறப்படுகின்றது. மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடும்ப வன்முறை குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் உதவிமைய எண் விளம்பரம் செய்யப்படுகின்றது. இவற்றின் காரணமாக பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிக அளவில் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்” என்றார்.

மூலக்கதை