பெண் வக்கீல் முகத்தில் எச்சில் துப்பியதால் வீட்டு தனிமையில் இருக்கும் ஐபிஎஸ் மனைவி மீது வழக்கு: பெங்களூருவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பெண் வக்கீல் முகத்தில் எச்சில் துப்பியதால் வீட்டு தனிமையில் இருக்கும் ஐபிஎஸ் மனைவி மீது வழக்கு: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் சிறு குழந்தைகள் விவகாரத்தில் பெண் வக்கீல் மீது ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவி எச்சில் துப்பிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு டாஸ்கர்டவுன் இன்பென்டரி சாலையில் அமைந்துள்ளது தனியார் குடியிருப்பு. இ்ங்கு வசித்து வருபவர் வக்கீல் வந்தனா வெங்கடேஷ் (28). அதே மாடியில் ஐ.பி.எஸ் அதிகாரி அஜய் ஹிலாரியின் குடும்பமும் வசித்து வருகிறது. ஏற்கனவே, அஜய் ஹிலாரிக்கு கொரோனா பாசிடிவ் இருந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் அவரது மனைவி ஹனி ஹிலாரி மற்றும் 2 குழந்தைகள் மட்டும் உள்ளனர். இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், அஜயின் 2 குழந்தைகளும் பால்கனியில் கூச்சலிட்டபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வக்கீல் வந்தனா வீட்டின் வெளியே  நின்று செல்போனில், ஒரு வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது  குழந்தைகளின் சத்தம் அவருக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் குழந்தைகளை அமைதியாக இருக்கும்படி கூறிய வந்தனா, ஹனியிடம் குழந்தைகள் சத்தம் போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ஹனி எந்த விதமான பதிலும் கூறவில்லை. மாறாக சில நிமிடங்களில் 8 காவலர்கள் வந்தனாவின் வீட்டிற்கு சென்றனர். வந்தனாவிடம் அவர்கள், ‘நீங்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு தொல்லை கொடுத்தது மட்டுமின்றி தகாத  வார்த்தைகளால் திட்டியுள்ளீர்கள். உங்களை நாங்கள் கைது செய்ய வந்துள்ளோம்,’  என்றனர். இது தொடர்பாக வந்தனா, ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவியிடம் பேச முயன்றார். அப்போது பெண் வக்கீலுக்கும், ஹனிக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக ஆத்திரம் அடைந்த ஹனி, வந்தனாவின் மீது எச்சில் உமிழ்ந்துள்ளார்.  இதில் வந்தனாவிற்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. ஏற்கனவே, ஹனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், அவரது உமிழ் நீரில் கொரோனா  வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வந்தனா உடனடியாக சானிடைசர் போட்டு முகத்தை கழுவினார். உமிழ் நீர் அகன்று விட்டாலும் தொற்று தொடர்பான பீதி  மட்டும் வந்தனாவிடம் இருந்து நீங்கவில்லை. ஹனியின் செயலால் அதிருப்தி அடைந்த வந்தனா, முகநூல் வாயிலாக நகர போலீஸ் கமிஷனருக்கு  புகார் அளித்துள்ளார். இதையடுத்து நகர போலீஸ் தரப்பில் இரண்டு பேரிடமும்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், வந்தனா தனது புகாரில் இருந்து  பின்வாங்கவில்லை. இதையடுத்து, ஹனி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை