லடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
லடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு

டோக்கியோ: இந்தியா - சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், தன்னிச்சையாக சீனா, ராணுவ நிலையை மாற்றுவதற்கு ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாமிட்டது. இந்தியப் படைகள் துரிதமாக செயல்பட்டு, சீன ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்தது. கடந்த ஜூன் 15ம் தேதி, இரு ராணுவத்துக்கும் இடையே கைகலப்பு மற்றும் மோதல் ஏற்பட்டது. அதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை சீனா உறுதி செய்யவில்லை. தொடர்ந்து இந்தியா - சீனா எல்லையில் படைகள் குவிப்பால் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாட்டு தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், இன்று லடாக் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவுடன் உரையாடிய பின்னர், இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வெளியுறவு செயலர் ஸ்ரிங்க்லாவுடன் ஒரு நல்ல பேச்சு இருந்தது. எல்லை கட்டுப்பாடு பகுதியில் நிலவும் சூழல் குறித்தும், அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஜப்பானும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை தான் விரும்புகிறது. ஒருதலைப்பட்சமாக ராணுவ நிலைகளை மாற்றுவதற்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் அத்துமீறலால் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்கு, இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஜூன் 19ம் தேதி சுசுகி பதிவிட்டிருந்தார். இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில், ஜூன் 27 அன்று இந்தியப் பெருங்கடலில் ஜப்பான் தற்காப்பு கடற்படை, இரண்டு இந்திய போர்க்கப்பல்களுடன் இணைந்து ஒரு கூட்டுபயிற்சியில் ஈடுபட்டன.

இது குறித்து டில்லியில் உள்ள ஜப்பானிய மிஷனின் துணை தலைவர் தோஷிஹைட் ஆண்டோ கூறுகையில், இது கடந்த 3 ஆண்டுகளாக இரு நாட்டு வீரர்களும் இணைந்து மேற்கொள்ளும் 15வது பயிற்சியாகும். இந்திய கடற்படையுடன் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கான நல்லெண்ண பயிற்சி இது. இந்த பயிற்சியின் உள்ளடக்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தகவல்தொடர்பு பயிற்சிக்கானது. குறிப்பிட்ட நோக்கம் இல்லை' என தெரிவித்தார்.

கடந்த 2017ல் டோக்லாம் பிரச்னையின் போது, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு முதல்நாடாக ஜப்பான் ஆதரவு தெரிவித்திருந்தது. டோக்லாமின் நிலையை மாற்ற எந்த நாடும் சக்தியைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்போதைய ஜப்பானிய தூதர் கென்ஜி ஹிராமட்சு கூறினார். கிழக்கு சீனக்கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகள் அருகே ஜப்பானிய கடல் எல்லைக்குள் இரண்டு சீன கடலோர கப்பல்கள் நுழைந்த விவகாரத்தில் ஜப்பான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜப்பானால் நிர்வகிக்கப்படும் சென்காகு தீவுகளை சுற்றிய கடல்பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

உடனடியாக ஜப்பானிய பகுதியை விட்டு சீன கப்பல்கள் வெளியேற வேண்டுமென ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அமைதியாகவும் உறுதியுடனும் தொடர்ந்து கையாள்வோமென ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார். ஜூன் 22க்கு பின் சீனக் கப்பல்கள் சென்காகு தீவுகளைச் சுற்றியுள்ள ஜப்பானிய பிராந்திய கடலுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. சீனா தனது கப்பல்களை 80 நாட்களுக்கு ஒருமுறை ஜப்பானிய கடல்பகுதிக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை