370-வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி

தினகரன்  தினகரன்
370வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி

மும்பை: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு உரிமைச் சட்டம் 370-வது பிரிவை ரத்து செய்தும் சட்டம் ஒழுங்கு நிலையில் முன்னேற்றம் இல்லையே என்று மத்திய அரசு்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் முதியவர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதி, அவரின் பேரனையும் கொல்ல முயன்றார். ஆனால் சிறுவனோ தனது தாத்தா இறந்தது கூடத் தெரியாமல் அவரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அவரை எழுப்ப முயன்ற காட்சி பலரையும் உலுக்கியது. இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு சிவசேனா கட்சி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.\r \'\'ஜம்மு காஷ்மீர் மாநிலம் புதிதாகப் பிரிக்கப்பட்ட பின்பும் அந்த மாநிலத்தில் அமைதி திரும்பாதது வியப்பாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்ட 370-வது பிரிவு நீக்கப்பட்டது, நிர்வாக வசதிக்காக மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது, தீவிரவாதிகளிடம் கள்ளப் பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது. இத்தனையும் செய்து என்ன பலன், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சூழலில் முன்னேற்றம் இல்லையே?\r சமீபத்தில் ஒரு முதியவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவருடன் வந்த சிறுவன், தனது தாத்தா இறந்துவிட்டது கூட அறியாமல் அவர் மீது அமர்ந்துகொண்டு எழுப்ப முயன்ற காட்சி தேசத்தை உலுக்கியது. இதுபோன்ற காட்சிகளை சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகளில் தான் பார்க்க முடியும். தற்போது ஜம்மு காஷ்மீரில் பார்க்கிறோம். இது மத்திய அரசின் நிர்வாகக் குறைவு, திறமையின்மை என்பதை மத்திய அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை