‛ஹாங்காங்கை விடுதலை செய் என கோஷமிட்டால் சட்டவிரோதம்'

தினமலர்  தினமலர்
‛ஹாங்காங்கை விடுதலை செய் என கோஷமிட்டால் சட்டவிரோதம்

ஹாங்காங்: ‛ஹாங்காங்கை விடுதலை செய்', 'நம் காலத்தின் புரட்சி' போன்ற கோஷமிடுவது பிரிவினைவாதத்தை தூண்டுவதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கருதப்படுமென ஹாங்காங் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு, ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹாங்காங் போராட்டக்காரர்களின் கோஷம் குறித்த அரசின் பார்வையை ஹாங்காங்கில் உள்ள நீதிமன்றங்கள் ஆதரவு அளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, இது பிரிவினை, அடிபணிதல், பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சட்டத்தில் இடம்பெற்றது. இது ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை மேலும் நசுக்குகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

‛ஹாங்காங்கை விடுதலை செய், நம் காலத்தின் புரட்சி' என்ற வாசகம் இப்போதெல்லாம் ‛ஹாங்காங் சுதந்திரம்' அல்லது ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தை சீன மக்கள் குடியரசிலிருந்து பிரித்தல், சட்டபூர்வமான நிலையை மாற்றுவது அல்லது கீழ்ப்படுத்துதல் ஆகியவற்றைக் குறிக்கிறது' என ஹாங்காங் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனா அமல்படுத்தியுள்ள பாதுகாப்பு சட்டத்தால் ஹாங்காங் மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் உரிமை பறிக்கப்படாது என மீண்டும் ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பிரிட்டனிடம் இருந்து சீனாவுக்கு ஹாங்காங் தாரை வார்க்கப்பட்ட 23வது ஆண்டு தினம் நேற்று முன் தினம் (ஜூலை 1) கொண்டாடப்பட்டது. அப்போது 370 பேரை கைது செய்த ஹாங்காங் போலீசார், 10 பேர் மீது புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் வெளிப்படை தன்மை இல்லாதது மற்றும் விரைந்து அமல்படுத்தப்பட்டதை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜூன் 30ல் சட்டத்தை நிறைவேற்றிய சீன அரசு, அடுத்த நாள் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தது. புதிய சட்டம் பிரிவினை, அடிபணிதல், பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுறவு ஆகிய குற்றங்களை சிறை தண்டனை விதிக்க வழி செய்கிறது. மேலும் ஹாங்காங் குற்றவாளிகளை நாடு கடத்தி, சீன நீதிமன்றங்களில் தண்டனை அளிப்பதற்கு அனுமதியளிக்கிறது.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள், சீனா மேலும் மேலும் சர்வாதிகார நாடாக மாறி வருவதை உலகம் அறிந்து கொள்ள சாளரமாக இருப்பதாக ஹாங்காங்கில் இருந்து தப்பிய போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான நாதன் லா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை