அனைவரும் மாஸ்க் அணிந்தால் தான் எடிட் ஆப்ஷன்: டுவிட்டர் நக்கல்

தினமலர்  தினமலர்
அனைவரும் மாஸ்க் அணிந்தால் தான் எடிட் ஆப்ஷன்: டுவிட்டர் நக்கல்

வாஷிங்டன்: டுவிட்டர் பயனர்களின் பல நாள் கோரிக்கையான எடிட் ஆப்ஷனுக்கு, அந்நிறுவனம், ‛அனைவரும் மார்க் அணிந்தால் எடிட் செய்யும் வசதியை பெறலாம்,' என நக்கலாக பதிவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பயனர்களின் பதிவுகளில் ஏதேனும் தவறு இருப்பின் அவற்றை எடிட் செய்யும் வசதியும் இருக்கிறது. இதனால், பயனர்கள் பதிவினை தேவைக்கேற்றார் போல எடிட் செய்து வந்தனர். ஆனால், டுவிட்டரில் பல விதமான அப்டேட்கள் வந்தாலும், அந்த ஆப்ஷன் மட்டும் தரவில்லை. அது இல்லாதது மட்டுமே பயனர்களுக்கு குறையாக இருந்தது. இதனால், டுவீட்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை நீக்கிவிட்டு புதிதாக தான் டுவீட் செய்ய வேண்டும்.

பயனாளர்களால் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடிட் ஆப்ஷனை கொடுக்காமல் டுவிட்டர் நிர்வாகம் சமாளித்து வந்தது. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டால் பதிவுகளின் உண்மைத்தன்மை போய்விடும் என்ற கருத்தையும் டுவிட்டர் கூறி வருகிறது. இந்நிலையில் இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், ‛அனைவரும் மாஸ்க் அணிந்துவிட்டால் நீங்கள் எடிட் செய்யும் வசதியைப் பெறலாம்,' எனப் பதிவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவதன் அவசியத்தை உலக நாடுகள் வலியுறுத்தினாலும், ஒருசிலர் அதை கடைப்பிடிப்பது இல்லை. அதனை கிண்டல் செய்யும் வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த மறைமுகமான பதிவுக்கு, ‛எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அனைவரும் மாஸ்க் அணிவது நடக்காத ஒன்று, அதே போல் நீங்கள் எடிட் ஆப்ஷன் கொடுப்பதும் நடக்காத ஒன்று', ‛இதற்கு எடிட் ஆப்ஷன் இல்லை என்றே சொல்லி இருக்கலாம்' என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மூலக்கதை