உபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உபி.யில் நள்ளிரவில் பயங்கரம்: டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சுட்டுக் கொலை

வீட்டின் கூரை மீது அமர்ந்து தலைமறைவு ரவுடிகள் திடீர் தாக்குதல்
50 கொலையில் தொடர்புடைய கும்பலை பிடிக்க சென்ற போது சோகம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 50 கொலை மற்றும் கொலை முயற்சியில் தொடர்புடைய ரவுடிகளை நள்ளிரவில் பிடிக்க சென்ற போது போலீஸ் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார், ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வீட்டின் கூரை மீது மறைந்திருந்து நடத்திய தாக்குதல் சம்பவம் உத்தரபிரதேச போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த சுபேபூர் காவல் நிலைய பகுதியில் உள்ள பிகேரு கிராமத்தில் தலைமறைவு கொலைக் குற்றவாளி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளான ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து போலீஸ் டிஎஸ்பி  தேவேந்திர மிஸ்ராவின் தலைமையில் போலீஸ் படை நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பிகேரு கிராமத்திற்கு சென்றது.

போலீஸ் குழு விகாஸ் துபே வீட்டை சுற்றிவளைத்த போது, வீட்டின் கூரையில் பதுங்கி இருந்த 15 பேர் கொண்ட ரவுடி கும்பல், போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. காவல்துறையினரும் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நான்கு போலீசார் என, 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயமடைந்த பித்தூர் காவல் நிலைய எஸ். ஐ சேலேந்திர பிரதாப் சிங், கான்ஸ்டபிள் அஜய் சிங் செங்கர், கான்ஸ்டபிள் அஜய் காஷ்யப், சிவ் மூரத் நிஷாத் காவல் நிலைய ஹோம்கார்ட் ஜெய்ராம் படேல், எஸ். ஐ சுதாகர் பாண்டே, எஸ். ஐ விகாஸ் பாபு ஆகியோர் ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் மீதான துப்பாக்கி தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், கான்பூர் மண்டல கூடுதல் போலீஸ் தலைவர் ஜெய் நாராயண் சிங் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர் பதற்றம் காரணமாக கான்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளதால், கான்பூர் சுற்றுவட்டார பகுதியில் பதற்றம் நிலவுகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விஷயத்தில் கடுமையான அறிவுறுத்தல்களை போலீசாருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசி இந்த விவகாரத்தில் அறிக்கை கோரியுள்ளார். கொலை கும்பல் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், உத்தரபிரதேச போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து நாராயண் சிங் கூறுகையில், ‘நேற்றிரவு போலீசார் ரவுடிகளைப் பிடிக்க கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது மறைந்திருந்த ரவுடிகள், போலீசார் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் கொல்லப்பட்டனர். நான்கு போலீஸ்காரர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இரண்டு போலீசாருக்கு வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதால், அவர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு தொடர்ந்து போராடி வருகிறது. ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் வருகை ரவுடிகளுக்கு எப்படி தெரிந்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

விகாஸ் துபே யார்?
கடந்த 2000ம் ஆண்டில், கான்பூரின் சிவலி காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் உதவி மேலாளர் சித்தேஷ்வர் பாண்டே கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் விகாஸ் துபே.

மேலும், கான்பூரின் சிவலி காவல் நிலைய பகுதியில், 2000ம் ஆண்டில் ரம்பாபு யாதவ் கொலை, 2004ம் ஆண்டு கேபிள் தொழிலதிபர் தினேஷ் கொலை வழக்கில் விகாஸ் துபே ெதாடர்புடையவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அவர் மீது சுமார் 53 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும், 2003ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் சந்தோஷ் சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டார்.

ஆனால், அந்த வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

.

மூலக்கதை