கழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020

தினமலர்  தினமலர்
கழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020

புதுடில்லி: ‘‘பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனிஸ் கான், எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்,’’ என கிரான்ட் பிளவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது மிகவும் கடினம் போல. கடந்த 2007 உலக கோப்பை தொடரின் போது, பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர் (தெ.ஆப்.,) மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

தற்போது கடந்த 2014–19ல் பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக இருந்த, ஜிம்பாப்வே முன்னாள் வீரர் கிரான்ட் பிளவர் 49, மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். தற்போது இலங்கை பேட்டிங் பயிற்சியாளராக உள்ள இவர் கூறியது:

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது, யூனிஸ் கானை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியில் (2016) பங்கேற்றோம். அப்போது மதிய உணவு இடைவேளை, யூனிஸ் கானுக்கு சில பேட்டிங் ‘அட்வைஸ்’ வழங்க முயன்றேன். ஆனால் எனது அறிவுரையை கண்டு கொள்ளாத அவர், திடீரென எனது கழுத்தில் கத்தியை வைக்க, பதறிப் போனேன். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த மிக்கி ஆர்தர், இப்பிரச்னையில் தலையிட்டார். இது சற்று வித்தியாசமாக இருந்தாலும், பயிற்சி பணியில் இதுவும் ஒரு பகுதி தான் என எடுத்துக் கொண்டேன். இருப்பினும், இந்த சம்பவம் அந்த தொடரையே எனக்கு நரகமாக மாற்றியது.

இவ்வாறு கிரான்ட் பிளவர் கூறினார்.

பதில் இல்லை

தற்போது யூனிஸ் கான் 42, பாகிஸ்தான் அணி பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து சென்றுள்ளார். கிரான்ட் பிளவர் கூறியது குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை.

மூலக்கதை