அகமது படேலிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

தினமலர்  தினமலர்
அகமது படேலிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்றம், வங்கி முறைகேடு தொடர்பான வழக்குகளில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலிடம், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், மூன்றாம் கட்டமாக நேற்றும் விசாரணை நடத்தினர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 'ஸ்டெர்லிங் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா.

வழக்குப் பதிவு





இவர்கள், வங்கியில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை வேறு வழிகளில் செலவு செய்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிமாற்றம், வங்கி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள்பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இந்த முறைகேட்டில், காங்கிரஸ் பொருளாளர்
அகமது படேலின்குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பது, விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, சமீபத்தில் டில்லியில் உள்ள அகமது படேலின் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். இரண்டாம் கட்டமாக, கடந்த, 30ல், விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அகமது படேலின் வீட்டுக்கு நேற்று வந்தனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன், கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர்.
கையுறை, முக கவசம் அணிந்தபடி சென்ற அவர்கள், அகமது படேலிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்



அப்போது சந்தேசரா வழக்கு தொடர்பாகவும், அதில், அகமது படேல் குடும்பத்தினருக்கு உள்ள தொடர்பு குறித்தும் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அதிகாரிகள் கேட்டனர். அவர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அகமது படேலிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதை அடுத்து, விரைவில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு இதில் உள்ள தொடர்பு வெளிச்சத்துக்கு வரும் என்றும், அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமது படேலுக்கு, 70 வயதாகிறது. இதனால், கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அவர் கூறியதை அடுத்து, அவரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரிக்காமல், வீட்டிற்கே சென்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை