பீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

தினகரன்  தினகரன்
பீகாரில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 22 பேர் பலி..: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

பாட்னா: பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 22 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா, வெட்டுக்கிளி தாக்குதல், நிலநடுக்கம், புயல் என தொடர்ந்து இந்தியா பல பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளில் இருந்தே இந்தியா இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது வடமாநிலங்கள் மழை, இடி மற்றும் மின்னல் போன்றவற்றால் அதிகமாக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில், பீகாரில் இன்று ஒரே நாளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள், பாட்னா, கிழக்கு சம்பரன், சமஸ்திபூர், ஷியோஹர், கதிஹார், மாதேபுரா மற்றும் பூர்னியா ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த வாரம் பீகாரில் இடி, மின்னல் தாக்கி 92 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை