அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

FILMI STREET  FILMI STREET
அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

புதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால், மாஹி, ஏனாம்) மொத்தம் 3.36 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

அதில் 1.8 லட்சம், சிவப்பு குடும்ப அட்டைகள், 1.56 லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானதால் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை நியாயவிலைக் கடை மூலமாக தராமல் அரசு ஊழியர்கள் மூலம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன.

இதனால் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் இலவச அரிசி தர புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி அரசு ரூ.5.28 கோடியை ஒதுக்கீடு செய்தது.

அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி ஊரடங்கு தொடங்கிய பிறகு தற்போது தொடங்கியுள்ளது.

மாநில அரசு முடிவின்படி நியாய விலைக்கடை மூலம் அரிசி வழங்கப்படவில்லை.

நியாய விலைக்கடை ஊழியர்களைத் தவிர்த்து, மீண்டும் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மூலமாக அரசுப் பள்ளிகளில் வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி அரிசி விநியோகம் இன்று (ஜூலை 1) தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்…

“புதுச்சேரியில் 507 நியாய விலைக்கடைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 800 பேரின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கெனவே 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனாலும் கொரோனா காலத்தில் நாங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம்.

இருந்தபோதிலும் அரசு எங்களுக்கு பணி வழங்கவில்லை.

ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தை ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்கின்றனர்.

ரேஷன் கடைகளின் செயல்பாடும், ஊழியர்களின் வாழ்வும் முற்றிலும் மாறிவிட்டது.’ என்கின்றனர்.

மூலக்கதை