2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர்; 77.93% மக்கள் ஆதரவு

தினமலர்  தினமலர்
2036 வரை புடின் தான் ரஷ்ய அதிபர்; 77.93% மக்கள் ஆதரவு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் பதவியில், 2036 வரை நீடிக்கும் வகையில், விளாதிமீர் புடின் கொண்டு வந்துள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு, நடந்த ஓட்டளிப்பில் புடினுக்கு ஆதரவாக 77.93% மக்கள் ஓட்டளித்துள்ளனர்.


ரஷ்ய அதிபர் பதவிக் காலம், ஆறு ஆண்டுகள். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், இரு முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, இரு முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புடின், அதன் பின், பிரதமராக பதவி வகித்தார். பின், 2012ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். இவர் பதவிக் காலம், 2024ல் முடிகிறது. அதன் பிறகு பதவியில் தொடர சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரியில் அரசியல்சாசன சட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதில் 2024-க்கு பிறகு அடுத்த இரண்டு முறையும் தானே அதிபராக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளார். மேலும் நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமிக்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது.


இதற்கான ஓட்டுப்பதிவு ஜூன் 25ம் தேதி துவங்கியது. கடந்த ஒருவாரமாக நடந்த ஓட்டெடுப்பில், 77.93% மக்கள் புடின் ரஷ்ய அதிபராக 2036ம் ஆண்டு வரை தொடர ஆதரவு அளித்துள்ளனர். 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இதனை தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், 2036ம் ஆண்டு வரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடர உள்ளார் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஓட்டெடுப்பு பொய்யானது என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

மூலக்கதை