'வாணி ராணி' நடிகைக்கு கொரோனா!

தினமலர்  தினமலர்
வாணி ராணி நடிகைக்கு கொரோனா!

தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான சீரியல் நடிகை நவ்யா சுவாமி. இவர் ராதிகாவின் 'வாணி ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அரண்மனைக் கிளி, ரன் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் நா பேரு மீனாட்சி மற்றும் அமே கதா உள்ளிட்ட சீரியல்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொற்று உறுதியாவதற்கு முன்னர் நவ்யா சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். எனவே, அவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் தொற்று பரவியிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கொரோனா தொற்று உறுதியானதால் இரவு முழுவதும் கதறிக் கதறி அழுததாகக் கூறியுள்ள நவ்யா, "நான் இந்தத் துறையை நம்பி தான் வாழ்கிறேன் என்பதால் ஷுட்டிங்கிற்கு வர முடியாது என கூறவில்லை. நான் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் எனக்கு வைரஸ் தாக்குதல் வந்துள்ளது.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள எங்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. ஆனாலும் டிவி துறையில் போட்டி அதிகம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சீரியலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் படப்பிடிப்பு நடந்தது. நான் அதில் கலந்து கொண்டேன்.

ஆனால், நான் வேண்டுமென்றே நோயை பரப்புவதற்காக இப்படி செய்ததாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஏன் அப்படி செய்யப் போகிறேன்? நான் ஷூட்டிங் செய்யும் போது எந்த அறிகுறிகளும் இல்லை. எனக்கு சில அறிகுறிகள் தெரிந்தவுடன் நான் டெஸ்ட் செய்து கொண்டேன். இந்த வைரஸ் எனக்கு எப்படி தொற்றி கொண்டது என்பது எப்படி தெரியும். எனக்கு பாசிட்டிவ் என்பதால் இப்படி சர்ச்சை ஏற்படுத்தாதீர்கள்" என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை