மறக்க முடியுமா? - நுாறாவது நாள்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  நுாறாவது நாள்

படம்: நுாறாவது நாள்
வெளியான ஆண்டு : 1984
நடிகர்கள் : மோகன், விஜயகாந்த், நளினி
இயக்கம் : மணிவண்ணன்
தயாரிப்பு : திருப்பதிசாமி பிக்சர்ஸ்

திரைப்படத்தால், இந்த சமூகத்திற்கு நன்மை கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, பதில் அளித்தது, நுாறாவது நாள் படம். ஆம்... இப்படத்தை பார்த்து, ஜெயபிரகாஷ் என்பவன், ஒன்பது பேரை கொலை செய்து, வீட்டின் சுவரில் புதைத்து வைத்தான். அவனது வாக்குமூலமே, படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தது.

'சீரியல் கொலை, த்ரில்லர்' என, ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்திருந்தார், மணிவண்ணன். இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல் எனக் கூறப்பட்டாலும், திரைக்கதையில் வித்தை காட்டியிருந்தார்.'வெள்ளி விழா நாயகன்' மோகன், இப்படத்தில் எதிர்மறை ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நளினி. இரண்டாம் கதாநாயகனாக, விஜயகாந்த். மிக குறைந்த செலவில், 12 நாட்களில் படம் பிடிக்கப்பட்ட படம் இது. இப்படத்திற்கான, 'ரீ ரிகார்டிங்கை' அரை நாளில் செய்து முடித்தாராம், இளையராஜா.

மோகன், விஜயகாந்த் நடித்திருந்தாலும், சில சீன்களில் மட்டுமே நடித்த சத்யராஜ், பெரும் பெயர் பெற்றார். நெடுநெடுவென வளர்ந்த சத்யராஜ், இப்படத்துக்காக மொட்டை அடித்து, ரவுண்ட் கண்ணாடி அணிந்து நளினியை கொலை செய்ய தேடுவார்... அந்த, 'திக் திக்' நிமிடங்களில், சத்யராஜ் பெயர் வாங்கிவிடுவார். இந்தப் படத்திற்கு பின் தான், சத்யராஜ், தனி வில்லன் அவதாரம் எடுத்தார். இளையராஜா இசையில், 'விழியிலே மணி விழியில்...' பாடல், இப்போதும் முணுமுணுக்கப்படுகிறது.

திகில் படத்திற்கு, இசை மற்றும் ஒளிப்பதிவு மிக முக்கியம். அதை சிறப்பாக செய்திருந்தனர், இளையராஜாவும், சபாபதியும். தமிழின் சிறந்த த்ரில்லர் படங்களில், நுாறாவது நாள் முக்கிய இடம் பிடிக்கும்.

மூலக்கதை