இந்தியாவிடம் வாலாட்டிய சீனாவுக்கு எட்டுத்திக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் ஆவேசம்

தினகரன்  தினகரன்
இந்தியாவிடம் வாலாட்டிய சீனாவுக்கு எட்டுத்திக்கும் எதிர்ப்பு: அமெரிக்கா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் ஆவேசம்

புதுடெல்லி: இந்தியாவிடம் எல்லையில் வாலாட்டிய சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் எதிராக திரும்பி உள்ளன.  கிழக்கு லடாக் எல்லையில் இந்திய பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டது. சீனாவின் இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் தங்கள் இன்னுயிரை தந்து முறியடித்தனர். இதன் காரணமாக, இந்தியா, சீனா இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் வாலாட்டிய சீனாவை வர்த்தக ரீதியாகவும் பதிலடி தர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக சீனாவை சேர்ந்த புகழ்பெற்ற டிக்டாக் உட்பட 59 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சீனா மீது உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. இந்தியா உடனான மோதல் மட்டுமின்றி, ஹாங்காங் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளது. தென் சீன கடல் பகுதியிலும் உரிமை கொண்டாடி, சிறு சிறு அண்டை நாடுகளுடன் விரோதத்தை வளர்த்துள்ளது. தற்போது, இந்த விவகாரங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து சீனாவுக்கு எதிராக எட்டுத்திக்கும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே, சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளது. இதனால், இந்தியாவைப் போலவே சீன ஆப்களுக்கு அமெரிக்காவிலும் தடை விதிக்க வேண்டு–்ம என சிலிக்கான் வேலியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், பலமிக்க செனட் எம்பி.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஹாங்காங் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 27 நாடுகளும் சீனாவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன. இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன. சீனா தனது அண்டை நாடுகளை மிரட்டுவதோடு மட்டுமின்றி, உள்நாட்டில் உய்கர் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாட்டி வதைப்பதாக இங்கிலாந்து குற்றம்சாட்டி உள்ளது. சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென ஜெர்மனியும் வலியுறுத்தி உள்ளது.ஏற்கனவே, கொரோனா விவகாரத்தை எதிர்த்ததற்காக தன் மீது சைபர் தாக்குதல் நடத்தியதால் ஆஸ்திரேலியாவும் சீனா மீது தீராத கோபத்தில் உள்ளது. இதனால், ஹாங்காங் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவும் சீனாவுக்கு எதிராக திரும்பி உள்ளது. ஜப்பானையும் சீனா விட்டு வைக்கவில்லை. ஜப்பானுக்கு சொந்தமான ஒரு தீவை சீனா பல ஆண்டாக சொந்தம் கொண்டாடி பிரச்னை செய்து வருகிறது.இதனால், இந்தியாவுடன் சீனா மோதிய உடனேயே சீனாவை ஒட்டிய தனது எல்லையில் ஜப்பான் படைகளை குவித்துள்ளது. போர் விமானங்களை தடுத்து அழிக்கக் கூடிய அதிநவீன வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணைகளை எல்லையில் நிலை நிறுத்தி உள்ளது. இதனால் இந்தியாவிடம் இனியும் சீனா வாலாட்டினால், அதற்காக அது மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாலேயே தற்போது அடக்கி வாசிக்கிறது.இந்திய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுலடாக் விவகாரத்தை தொடர்ந்து இந்திய பத்திரிகைகள், டிவி மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் சீனாவுக்கு எதிரான செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதனால் கடுப்பான சீன அரசு அந்நாட்டில் இந்திய ஊடகங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில இந்திய பத்திரிகைள், ஊடகங்கள் தடை விதிக்கப்பட்டும் உள்ளன. இதற்கு இந்திய பத்திரிகைகள் சங்கம் (ஐஎன்எஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவிலும் சீன ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் ஐஎன்எஸ் வலியுறுத்தி உள்ளது.பிளாக் செய்தது கூகுள்கூகுள் செய்தி நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், “ஆப்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள தடையை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.  அதே நேரம், இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள ஆப்களின் செயல்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார். சீனாவின் விதிக்கப்பட்ட தடையைதான் இவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ஆப்பிள் நிறுவனமும் சீன ஆப்களை பிளாக் செய்துள்ளது.

மூலக்கதை