பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்காமல் உடலை குடும்பத்திடம் ஒப்படைத்து விடுங்கள்: மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்காமல் உடலை குடும்பத்திடம் ஒப்படைத்து விடுங்கள்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்காமல் இறந்தவர்களின் சடலங்களை குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும்,’ என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் உறவினர்களிடம் வழங்காமல், மருத்துவமனைகளே பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ராஜீவ் கார்க் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகப்படுவோரின் சடலங்களை பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், சடலங்களை புதைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கண்டிப்பாக கொரோனா பாதித்த சடலத்துக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றப்பட வேண்டும். முழு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்தவர்கள் மட்டுமே இந்த சடலங்களை கையாள வேண்டும். பரிசோதனை முடிவுகளில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை