எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் போர் விமானங்கள், ஆயுதங்கள் ரூ.38,900 கோடிக்கு வாங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

தினகரன்  தினகரன்
எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் போர் விமானங்கள், ஆயுதங்கள் ரூ.38,900 கோடிக்கு வாங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: சீனாவுடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள், ஆயுதங்களை ரூ.38,900 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே வன்முறை நடந்ததைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 2 மாத காலமாகவே சீனா உடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில், ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள், ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 போர் விமானங்கள் ரூ.7,418 கோடிக்கு வாங்கப்பட உள்ளது. உள்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான எச்ஏஎல்.யிடம் இருந்து 12 சுகோய் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,730 கோடி செலவிடப்பட உள்ளது.மேலும், 248 அஸ்திரா பிவிஆர் ஏவுகணைகளை விமானப் படை மற்றும் கடற்படைக்கு வாங்குவது, நிலத்திலிருந்து சுமார் 1000 கி.மீ பாய்ந்து தாக்கும் பினாகா ஏவுகணைகளை வாங்குவது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர, தற்போதுள்ள 59 மிக் -29 போர் விமானங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தற்போதுள்ள சூழல் மற்றும் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ஆயுதப் படையை பலப்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இதில் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆயுத தயாரிப்புக்கான தொழில்நுட்பம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும். ஆயுதங்களுக்கான உபகரணங்கள் இந்திய ராணுவ தொழிற்சாலைகளிலும், சிறுகுறு நிறுவனங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் சில திட்டங்களின் செலவு 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம் சென்ற போது அங்கு அந்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்கும் பணிகளை ரஷ்யா வேகப்படுத்தும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவுக்கு ஆதரவாக பாக். படை குவிப்பா?இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிகளில் சீன ராணுவம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக, இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பலுசிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 20 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், ‘எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டதாக தகவல் உண்மையில்லை. அதே போல, ஸ்கராது விமான தளத்தை சீனா பயன்படுத்தி வருவதாகவும் அது சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது,’ என கூறியுள்ளது.

மூலக்கதை