தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ஊரடங்கால் பல பகுதிகளில் நகைக்கடை மூடப்பட்டிருந்தும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24ம்தேதி  தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. சவரன் ₹37,272க்கு விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்சமான விலையாகும். கொரோனா பாதிப்பு நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் விலை  கடந்த மாதம் 24ம் தேதி சாதனையை முறியடித்தது. அதாவது, கிராமுக்கு ₹53 அதிகரித்து, ஒரு கிராம்  ₹4,684க்கும்,  சவரனுக்கு ₹424 அதிகரித்து,  ₹37,472க்கும் விற்பனையானது. சவரன் ₹37472 அளவுக்கு உயர்ந்தது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். சவரன் ₹38000ஐ நெருங்கி விடுமோ என்ற அச்சம் நகை வாங்குவோரிடம் இருந்து வந்தது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது கிராமுக்கு ₹62 குறைந்து, ஒரு கிராம் ₹4,622க்கும், சவரனுக்கு ₹496 குறைந்து சவரன் ₹36,976க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்திருப்பது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை