தண்டையார்பேட்டை மண்டலம் முன்மாதிரியாக மாறியது எப்படி?

தினமலர்  தினமலர்
தண்டையார்பேட்டை மண்டலம் முன்மாதிரியாக மாறியது எப்படி?

தண்டையார்பேட்டை : தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதத்தில் முதலிடமும், சிகிச்சை பெறுவோர் சதவீதத்தில், கடைசி இடத்திலும் உள்ள தண்டையார்பேட்டை, மற்ற மண்டலங்களுக்கு முன் மாதிரியாக உருவெடுத்து உள்ளது.

சென்னை மாநகராட்சியில், நேற்றுடன், 60 ஆயிரத்து, 532 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டது. இதில், 36 ஆயிரத்து, 826 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். தவிர, 22 ஆயிரத்து, 777 பேர், சிகிச்சை பெறும் நிலையில், 929 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலிடம்:

இதில், தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஜூன், 6ம் தேதி வரை, தொற்றால் பாதிக்கப்பட்ட, 2,470 பேரில், 943 பேர் மட்டுமே குணமடைந்தனர். இது, 38.17 சதவீதமாகும். அதேநேரம், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 1,506 ஆகவும், சதவீதம், 60.97 ஆகவும் இருந்தது.இந்நிலையில், 25 நாட்களுக்கு பின், நேற்றைய நிலவரப்படி, தொற்றால் பாதிக்கப்பட்ட, 6,788 பேரில், 4,861 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது, 72 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 1,791 ஆகவும், சதவீதம், 26 ஆகவும் இருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில், தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் சதவீதத்தில் முதலிடமும், சிகிச்சை பெறுவோர் சதவீதத்தில், கடைசி இடத்திலும், தண்டையார்பேட்டை உள்ளது.ஆரம்பத்தில், சிகிச்சை பெறுவோர் சதவீதத்தில், உச்சத்தில் இருந்த நிலையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகளால், கடைசி இடத்திற்கு வந்திருப்பதோடு, மற்ற மண்டலங்களுக்கு முன்மாதிரியாகவும் உருவெடுத்துள்ளது.

சாத்தியமா?

இந்த முன்னேற்றத்திற்கு, சரியான திட்டமிடல், பணி ஒருங்கிணைப்பே காரணமாகும். சென்னை மாநகராட்சியில், மூன்று மண்டலத்திற்கு, ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.அதன்படி, ஒன்று, இரண்டு மற்றும் ஆறாவது மண்டலங்களுக்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்; மூன்று, நான்கு மற்றும் ஐந்துக்கு ஜெயகுமார்; எட்டு, ஒன்பது மற்றும் 10க்கு காமராஜ், ஏழு, 11 மற்றும் 12க்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், 13, 14 மற்றும் 15க்கு அன்பழகன் நியமிக்கப்பட்டனர்.

பின், நான்காவது மண்டலத்திற்கு மட்டும், அமைச்சர் பாண்டியராஜன் நியமிக்கப்பட்டார். தினசரி ஆய்வு, தொற்று பரவல் குறித்த துல்லிய கணக்கீடு, தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்பில் சுலப தன்மை போன்றவற்றால், 6ம் தேதி, குணமடைந்தோர் விகிதத்தில், கடைசியில் இருந்த தண்டையார்பேட்டை, நேற்றைய நிலவரப்படி, முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஒரு மண்டலத்திற்கு, ஒரு அமைச்சர் என்பதால் மட்டுமே, இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. அதன்படி, மாநகராட்சியின், 15 மண்டலங்களுக்கு, தனித் தனியே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.தவிர, முக்கிய துறைகளை கவனித்து வரும் அமைச்சர்களான, உதயகுமார், காமராஜ் மற்றும் தொற்று பாதிக்கப்பட்ட அன்பழகன் ஆகியோரை விடுவித்து, மற்ற அமைச்சர்களை நியமித்து, பணிகளை துரிதப்படுத்தினால், விரைவில் தொற்றிலிருந்து சென்னை மீள்வது சாத்தியம் என, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை