மின்னணு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு கடிதம்

தினமலர்  தினமலர்
மின்னணு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு கடிதம்

சென்னை :தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்து, ஐந்து முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்திற்கு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்களுடனான சந்திப்பு, சிறப்பு பணிக்குழு அமைத்தல் என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் தொடர்ச்சியாக, பன்னாட்டு நிறுவனங்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய, முதல்வர் அழைப்பு விடுத்து வருகிறார். தற்போது, 'ரகூட்டன் கிரிம்ஸன் ஹெளஸ், பி2 டபிள்யு, சீ லிமிடெட்' உள்ளிட்ட, ஐந்து முன்னணி வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி, அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள, பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும், முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப, ஊக்கச் சலுகைகளை வழங்கும் என்றும், உறுதி அளித்துள்ளார்.

மூலக்கதை