3 தவணையில் 70 சதவீத கட்டணம்: அரசுக்கு கல்வி நிறுவனங்கள் மனு

தினமலர்  தினமலர்
3 தவணையில் 70 சதவீத கட்டணம்: அரசுக்கு கல்வி நிறுவனங்கள் மனு

சென்னை : கல்வி கட்டணத்தில், 70 சதவீதத்தை, மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க கோரி, தனியார் பள்ளிகள், அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.

கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, முழுமையாக பின்பற்றப்படவில்லை. கல்வி கட்டணம் செலுத்தும்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் பல வற்புறுத்துகின்றன.அரசு பிறப்பித்த உத்தரவு மீறப்படுகிறது. எனவே, கட்டாயப்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''கட்டணம் வசூலிக்க அனுமதிக்க கோரிய மற்றொரு வழக்கில், தனியார் பள்ளிகள் சார்பில், அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.''அதில், கல்வி கட்டணத்தில், 70 சதவீதத்தை, மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்கும்படி கோரப்பட்டுள்ளது. அது, அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.இதையடுத்து, இவ்வழக்கை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மூலக்கதை