சீனாவின் 6 போர் தந்திரங்கள்!

தினமலர்  தினமலர்
சீனாவின் 6 போர் தந்திரங்கள்!

ஜப்பான் பாதுகாப்புத் துறை, 2019ல் வெளியிட்டுள்ள, பாதுகாப்பு வெள்ளை அறிக்கைப்படி, சீனாவின் அரசியல் சித்தாந்தப்படி, ராணுவப் படைகளால் மட்டும் போர் தொடுக்கப்படுவதல்ல என்று கூறுகிறது. சீனா அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மூன்று வகையான போர்களை நடத்துவதை நம்புகிறது.

இவற்றில் ஊடகப்போர், உளவியல் போர் மற்றும் சட்ட ரீதியான போர் ஆகியவை அடங்கும். இந்தியாவின் லடாக் பகுதியில், சீனாவுடன் போர் மூளும் சூழ்நிலையை பற்றிய செய்திகளை, உலக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ஆராய்ந்தால், சீனா ஏற்கனவே இத்தகைய ஆயுதமில்லாத போரை, திட்டமிட்டு நடத்தி வருகிறது என்று தோன்றுகிறது. அடையாளம் தெரியாத வலைதளங்கள், மக்களிடையே பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றன. அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியின்படி, 'சைனா டெய்லி' என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடக அமைப்பு, அமெரிக்காவில் கடந்த நான்குஆண்டுகளில், ஒட்டு மொத்தமாக, 190 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை, அமெரிக்க ஊடகங்களுக்கு விளம்பரங்களுக்காகவும், சைனா டெய்லியை அச்சிட்டு, இணைப்பாக வெளியிடவும் அளித்துள்ளது. ஒரு வேளை, இதனால் தான் அமெரிக்க முன்னணி பத்திரிகைகளில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சீனக் கொள்கை பற்றியும், இந்தியாவின் உள்நாட்டு நடப்பில், அரசுக்கு எதிரான கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றனவா என்ற கேள்வி எழுவது இயற்கையே.கடந்த, 1962ல், சீனா - இந்தியா போர் நடந்தது. 50 ஆண்டுகள் கழிந்த பின், நவம்பர் 5, 2012ல் வெளியான, அமெரிக்காவின், 'நியூஸ் வீக்' பத்திரிகையில், பிரபல இந்திய வெளியுறவு ஆய்வாளரான, பிரம்ம சலானி, 1962 போரில், சீனா உபயோகித்த, ஆறு அடிப்படை தத்துவங்களை, தற்காலப் போர் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்கியுள்ளார். கீழ்காணும் இந்த, ஆறு அடிப்படைத் தத்துவங்கள், நம் லடாக்கில், தற்போது நிகழும் இழுபறியில், சீனா, இந்தியாவிடம் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகிறது; அதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள உதவும்.

1) எதிர்பாராத தாக்குதல்:



2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சீன ராணுவக் கலையின் குரு எனக் கருதப்படும், சுன் ட்ஜூ, போரை நடத்தாமலே வெற்றி பெறுவதே மகத்தானது என்று கூறியுள்ளார். அந்த தத்துவத்தின் குறிக்கோள், போரில் வெற்றி பெற, தீவிர ராணுவத் தாக்குதல்கள் தவிர, அரசியல் மற்றும் உளவியல் தாக்கங்களையும் உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
சீனா, 1962 போரை இந்தியா எதிர்பாராத விதத்தில் துவக்கி, அதே முறையில் முடித்தது. அதையே, சீனா, வியட்நாமுடன், 1979ல் நடத்திய போரில் பின்பற்றியது.

2) முதலில் தாக்குதல்:



இது, அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் போர் அல்ல. மாறாக, அதன் குறிக்கோள், எதிரிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதே. சீனப் பிரதமர் சூ என் லாய், இந்தியாவை எதிர்த்து, 1962லும், சீன அதிபர் டெங் ஷியாங் பிங், 1979ல் வியட்நாமை எதிர்த்து நடத்திய போர்கள், 'பாடம் புகட்டவே' நடத்தியதாக கூறினர்.

3) சரியான தருணத்துக்கு காத்திரு:



காத்திருந்து, சங்கடமான தருணத்தை தேர்வு செய்து, எதிரியை தடுமாற வைப்பது. உலகின் முழு பார்வையும், 1962ல், அமெரிக்கா - கியூபா சச்சரவில் இருந்த போது, சீனா, இந்தியாவைத் தாக்கி, கலக்கமான உலக சூழ்நிலையை தன் தாக்கத்துக்காக உபயோகித்தது.தற்போதும் கொரோனா வைரஸ் தாக்குதலில், இந்தியாவும், மற்ற நாடுகளும், தத்தளிக்கும் போது, லடாக் எல்லையில் ஊடுருவி, பாதுகாப்பு சூழ்நிலையில் அழுத்தம் ஏற்படுத்துவதும், இதே கோட்பாட்டின் அடிப்படையே.

4) ஒருமித்த கவனத்துடன் அதிரடி தாக்குதல்:



போரில் உடனுக்குடன் பலன் கிடைக்க வேண்டும். ஆகவே, ஒருமித்து அதிரடியாக செயல்பட வேண்டும். 1949ல் இருந்து, சீன ராணுவம், இதே வழிமுறையை பின்பற்றுகிறது; 1962 போரிலும் இதே உத்தியைப் பயன்படுத்தியது.

5) கூர்ந்தறிதல்:



சீனா, எப்போதுமே தாக்குதலை, பாதுகாப்பு செயலாக காட்டிக் கொள்ளும். அமெரிக்க ராணுவத் தலைமையகம், 'பென்டகன்' 2010ல் அமெரிக்க கீழ் சபைக்கு அளித்த ஒரு அறிக்கையில், 'சீன ராணுவத்தின் தற்கால போர்களில், பல முறை, சீனத் தலைவர்கள், தாக்குதலை, போரைத் தவிர்க்கும் தற்காப்பு நடவடிக்கையாக கூறியுள்ளனர்' என்று கூறியுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, 1962ல் இந்தியா மீதான தாக்குதல், 1969ல், சோவியத் யூனியனுடன் நிகழ்த்திய எல்லைப் போர், 1979ல், வியட்நாம் மீது நடத்திய தாக்குதல் ஆகியவை அடங்கும்.
சீனா எப்போதுமே தாக்குதலை, 'தற்காப்புக்கான எதிர் தாக்குதல்' என்று கூறி வருகிறது. சீன ஊடகங்களும், சீன வெளியுறவுத் தொடர்பாளரும், அண்மையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு இதே வண்ணம் பூசியதை பார்த்திருக்கிறோம்.

6) துணிச்சல்:



சீனப் போர் தத்துவத்தில், துணிச்சல் ஒரு அடிப்படை அங்கமாகும். அந்நாட்டின் முன்னாள் அதிபர் மா சே துங், போர்களில் பல முறை, இடர்களைப் பற்றி கவலை இல்லாமல் துணிச்சலுடன் செயல்பட்டார். அது போலவே, எதிர்மறை விளைவுகளையும், சோவியத் யூனியன் தலையிடும் ஆபத்தையும் கண்டு கொள்ளாமல், முன்னாள் அதிபர் டெங் ஷியாவ் பிங், வியட்நாம் மீது போர் தொடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும், அவர்கள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். அந்தப் பின்னணியை பின்பற்றி, வலிமை வாய்ந்த சீனா, தற்போதும் அவ்வாறு செயல்படலாம். இந்த, ஆறு உண்மைகளும், 1962 போரை, அலசியதில் கிடைத்தவை. ஆனால், வலிமை வாய்ந்த சீனாவின் போர்முனைப் போக்கை நிர்ணயிக்க, இன்றும் இவை உதவுபவை என்றே கருதுகிறேன்.அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், காங்கிரசுக்கு அளித்த, 2019 சீன ராணுவத்தின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையில், 21ம் நுாற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில், சீனா பெரும் வளர்ச்சி கண்டு, அனைத்தையும் உள்ளடக்கிய நாட்டின் சக்தியை பெருக்கிஉள்ளது.

ஆகவே, வரும் தசாப்தங்களில் சீனா பலம் வாய்ந்த, செல்வ வளமுள்ள நாடாக வளரும் குறிக்கோளுடன், உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தின் உதவியுடன், இந்திய - பசிபிக் கடல் பகுதியில் முதன்மை நாடாக திகழும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறியுள்ளது. அதற்குத் தடையாகக் கூடிய, ஒரே ஆசிய நாடு இந்தியா தான். ஆகவே, 'பணிந்து போனால் நண்பனாய் இரு; இல்லையேல் எதிரியாவாய்' என்று சீனா அதட்டலுடன் செயல்படுமா என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியம்! கர்னல் ஆர்.ஹரிஹரன் [email protected] இவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின்நிகழ்வுகளை ஆய்பவர்.


மூலக்கதை