லக்னோவில் குடியேற பிரியங்கா திட்டம்

தினமலர்  தினமலர்
லக்னோவில் குடியேற பிரியங்கா திட்டம்

புதுடில்லி: டில்லியில் அரசு பங்களாவை காலி செய்ய, காங்., பொதுச் செயலர், பிரியங்காவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் குடியேற, ஏற்கனவே திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது.
தற்போது, அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, ஒரு மாதத்திற்குள், பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, 3.26 லட்சம் ரூபாயை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு, நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.
எனினும், நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பேயே, அவர், உ.பி., மாநிலம், லக்னோவில், குடியேற திட்டமிட்டிருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது பற்றி காங்.,வட்டாரங்கள் கூறியதாவது:
உத்தர பிரதேச சட்டசபைக்கு, 2022ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில், காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என, பிரியங்கா விரும்புகிறார். இதனால் தொண்டர்களை சந்திக்க வசதியாக, அவர், உ.பி., தலைநகர் லக்னோவில் குடியேற திட்டமிட்டுள்ளார்.
அவரது பாட்டி இந்திராவின், தாய் மாமா மனைவியான ஷீலா கவுல் வசித்த, லக்னோ வீட்டில் குடியேற, பிரியங்கா முடிவு செய்துள்ளார். இந்த வீட்டில் தங்கியிருந்து கட்சி பணியாற்றவும், தொண்டர்களை சந்திக்கவும், அவர் முடிவு செய்துள்ளார்.
டில்லி பங்களா வாடகையாக, உள்துறை அமைச்சகம் செலுத்தக் கோரியிருந்த, 3.26 லட்சம் ரூபாயை, 'ஆன்லைன்' வழியாக, பிரியங்கா உடனடியாக செலுத்தி விட்டார்.
இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்., அடிபணியாது



டில்லி பங்களாவை காலி செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பற்றி, காங்., செய்தி தொடர்பாளர், ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:டில்லி பங்களாவை காலி செய்ய மோடி அரசு உத்தரவிட்டுள்ளது, காங்., தலைமை மீது பா.ஜ.,வுக்கு உள்ள கோபத்தையும், வெறுப்பையும் காட்டுகிறது. அதனால் தான், பழிவாங்கும் நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை பார்த்த, காங்., பயப்படாது; அடிபணியவும் செய்யாது. மோடி அரசின் தோல்விகளை, மக்களிடம் காங்கிரஸ் கூறுவதை, எதனாலும் தடுக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை