புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை: ஆயுத 'சப்ளை'க்கு ஒப்புதல்

தினமலர்  தினமலர்
புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை: ஆயுத சப்ளைக்கு ஒப்புதல்

புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் இரு தரப்பு உறவு குறித்து, பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக நேற்று
ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவில், 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9,000க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர். நம் நாட்டிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.இந்நிலையில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

அனுமதி



அப்போது, கொரோனாவால் இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்தனர். வைரஸ் தடுப்பு பணிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இருவரும் ஆலோசித்தனர். மேலும், இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அப்போது, அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் நடக்கவுள்ள, சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வருவதாக புடின் உறுதி அளித்தார். இதற்கு, அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.மேலும், இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 75வது ஆண்டு நிறைவுக்கும், ரஷ்ய அதிபராக புடினின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டதற்கும், புடினுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரு தரப்பு உறவு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததற்கு, பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புடின் நன்றி தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் விமானம்



சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.ராணுவத்துக்கு, 38 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் மதிப்பில், போர் விமானங்கள், ஏவுகணைகள் வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துஉள்ளது.

முடிவு



இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:ரஷ்யாவிடமிருந்தும், 'மிக் - 21' ரகத்தைச் சேர்ந்த, 29 போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்' நிறுவனத்தின் தயாரிப்பில், மேலும் சில போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'மிக் - 29' ரகத்தைச் சேர்ந்த, 59 விமானங்ளை நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

படைகள் குவிப்பா? பாகிஸ்தான் மறுப்பு!



பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், 20 ஆயிரம் வீரர்களை பாக்., குவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதை, பாக்., ராணுவம் மறுத்து உள்ளது. இது குறித்து, பாக்., ராணுவத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறியதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், கில்ஜித் பல்திஸ்தான் பகுதியிலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை நாங்கள் குவித்துள்ளதாக, சில மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது; இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.இந்த இரண்டு இடங்களிலும் கூடுதல் வீரர்களை நாங்கள் குவிக்கவில்லை. அதேபோல், எங்களது சக்ருது விமான தளத்தை சீன ராணுவத்தினர் பயன்படுத்த, நாங்கள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவதும் தவறு; எங்கள் நாட்டில், சீன வீரர்கள் எவரும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார். இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து, நம் நாட்டை அச்சுறுத்த, பாக்., விமான தளங்களை சீன ராணுவ வீரர்கள் பயன்படுத்தி வருவதாக, சமீபத்தில் சில மீடியாக்களில் செய்தி வெளியாகி இருந்தது.

2036 வரை பதவி: புடினுக்கு மக்கள் ஆதரவு



ரஷ்யாவில், ஒருவர், இரண்டு முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக பதவி வகிக்க முடியும். அதன்படி, 2008 வரை, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக இருந்த விளாடிமிர் புடின், அதன்பின், பிரதமராக பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, 2012 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, புடின் மீண்டும் அதிபராக இருக்கிறார். இவரின் பதவிக் காலம், 2024ல் முடிவடைகிறது. இதற்கிடையே, 2036 வரை, அதிபராக பதவியில் நீடிக்கும் வகையில், அரசியல் சாசன சட்டத்தில், அதிபர் புடின் மாற்றம் கொண்டு வந்தார். பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இதற்கான பொது ஓட்டெடுப்பு, ஜூன், 25ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
ஓட்டு எண்ணிக்கையில், அதிபர் புடினுக்கு மக்கள் ஆதரவு அளித்துஉள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த தேர்தலில், சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக, 77.9 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். அதற்கு எதிராக, 21.3 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர்' என்றார்.இதன் மூலம், 2036ம் ஆண்டு வரை, ரஷ்ய அதிபராக புடின் இருப்பது உறுதியாகியுள்ளது.

மூலக்கதை