சீனாவின் உண்மையான முகம் தெரிய வந்துள்ளது: டிரம்ப்

தினமலர்  தினமலர்
சீனாவின் உண்மையான முகம் தெரிய வந்துள்ளது: டிரம்ப்

வாஷிங்டன் : 'இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில் மிகவும் மூர்க்கதனமாக நடந்து கொள்வதன் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான முகம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து உள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், கேலீக் மெக்னானி கூறியதாவது:

இந்தியா - சீனா இடையேயான பிரச்னையை, அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையானது, மற்ற நாடுகளில் சீனா காட்டி வரும் மூர்க்கதனத்தின் ஒரு பகுதியே என, அதிபர் கூறியுள்ளார். இந்த பிரச்னையின் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான முகம் உலகுக்கு தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, அமெரிக்கா - சீனா உறவு குறித்தும், 'கொரோனா' பிரச்னை குறித்தும், அமெரிக்க பார்லி.,யின் உளவுத் துறைக்கான நிலைக் குழுவின் விசாரணை நடந்தது.

இதில் பேசிய பெரும்பாலான, எம்.பி.,க்கள், இந்தியாவுடான எல்லைப் பிரச்னையில், சீனா அராஜகப் போக்குடன் நடந்து கொள்வது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு ஆதரவாக, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளோருக்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர். ''கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரின் சிறப்பான பணிகளை பாராட்டு வதாக, டிரம்ப் கூறியுள்ளார்,'' என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான, கரோலின் லீவிட் கூறினார்.

மூலக்கதை