சாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..!

தினமலர்  தினமலர்
சாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..!

பிராக்: கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததை அடுத்து சாலையின் நடுவே 1,600 அடி நீளத்திற்கு மேஜையில் உணவு பதார்த்தங்களை பகிர்ந்து செக் குடியரசு மக்கள் கொண்டாடி உள்ளனர்.


கொரோனா பரவ துவங்கிய காலத்தில் முதல் நாடாக ஊரடங்கை அமல்படுத்தியதுடன், முகக்கவசம் அணிவதை செக் குடியரசு கட்டாயப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், மற்ற நாடுகளை விடவும் முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாடான செக் குடியரசில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 349 பேர் உயிரிழந்தனர்.

உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்றுக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை என எச்சரித்து வரும் சூழலில், வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செக் குடியரசு நாட்டிற்கு வர தடை நீடிக்கிறது. இருந்தபோதும், ஊரடங்கு நீக்கத்தை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. செக் குடியரசு தலைநகர் பிராகுவேயில் வெள்ளை நிற துணி விரிக்கப்பட்ட மேஜையின் மீது மலர்கள், உள்ளூர் மதுபானம் மற்றும் உணவு பதார்த்தங்களை கொண்டு வந்த மக்கள், மாலை நேரத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவை கொண்டாடவும், மற்றவர்களைச் சந்திக்க மக்களுக்கு இனி பயமில்லை என்பதை காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஒருவர் கடித்த சாண்ட் விச்சை மற்றவர்கள் உண்ண ஏற்க பயப்படவில்லை. எல்லோரும் இங்கே உணவு அல்லது ஒரு பூ கொண்டு வர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. குறிப்பாக எல்லோரும் இதில் பங்கெடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது என பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான பிராகுவே கஃபே உரிமையாளர் ஒன்ட்ரேஜ் கோப்ஸா தெரிவித்தார்.


ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள 14 வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க ஐரோப்பிய யூனியன் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட 14 நாடுகளில், கொரோனா தொற்று மையம் கொண்டுள்ள அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை