மறக்க முடியுமா? - தாவணிக்கனவுகள்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  தாவணிக்கனவுகள்

படம்: தாவணிக்கனவுகள்
வெளியான ஆண்டு: 1984
நடிகர்கள்: கே.பாக்யராஜ், சிவாஜி கணேசன், ராதிகா
இயக்கம்: கே.பாக்யராஜ்
தயாரிப்பு: பிரவீனா பிலிம்ஸ் லிமிடெட்

ரஜினி, கமல் என, நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும், 1980களில், சினிமாவில், கே.பாக்யராஜின் கொடி தான், உச்சத்தில் பறந்தது. எளிமையான கதை, அதில் விழும் சிக்கல், சிக்கலை அவிழ்க்க, நாயகன் படும்பாடு என்ற கோட்பாட்டில், திரைக்கதையோடு, பின்னி பிணைந்த நகைச்சுவையுடன், கே.பாக்யராஜ் சாதித்திருப்பார். சிவாஜி கணேசனுடன் இணைந்து கே.பாக்யராஜ் களமிறங்கிய படம் தான், தாவணிக் கனவுகள்.

ஏழை குடும்பத்தில் பிறந்த பட்டதாரி வாலிபனுக்கு, ஐந்து தங்கைகள். தான் படித்த படிப்புக்கு, வேலையில்லை. குடும்பத்தில் வறுமை; தங்கைகளின் திருமணம் போன்ற பிரச்னைகளிலிருந்து மீள, சென்னைக்கு செல்லும் நாயகன், அங்கு எப்படி போராடி, வாழ்வில் வெற்றி பெற்றான் என்பது தான், படத்தின் கதைக்களம்.சுப்ரமணியாக, பாக்யராஜ். தன் உடல்மொழிக்கு ஏற்ப, கதாபாத்திரத்தை வடிவமைப்பதில், அவரை அடிச்சிக்க ஆளே இல்லை.

தங்கைகளுடன் சினிமா பார்க்க செல்லுதல், சென்னையில் சம்பாதிக்க, ஐந்து ஐடியாக்களை பின்பற்றுதல் என, படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில், ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த படத்திற்கு, இன்னொரு பெரிய பலம், சிவாஜி கணேசன். மிலிட்டரியாக, படத்தின் கதாநாயகனுக்கு உதவும் கதாபாத்திரம். சின்ன சின்ன முகபாவங்களில், தான் நடிகர் திலகம் தான் என்பதை நிரூபித்துவிடுவார்.

சென்னையில், கே.பாக்யராஜுக்கு உதவும் கதாநாயகியாக, ராதிகா. தனக்கான இடத்தை, தக்க வைத்திருப்பார். கே.பாக்யராஜை நடிகனாக்கும் காட்சியில், இயக்குனராக, இயக்குனர் பாரதிராஜாவே நடித்திருப்பார். இளையராஜாவின் இசையில், பாடல்கள் வெற்றி பெற்றன. தாவணிக் கனவுகள் எப்போதும் ரசிக்கத்தக்கது!

மூலக்கதை