கொரோனா தடுப்பு மருந்து; பெரிய அளவிலான உற்பத்திக்கு தயாராகும் சீனா

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு மருந்து; பெரிய அளவிலான உற்பத்திக்கு தயாராகும் சீனா

பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் ஆராய்ச்சியை துரிதப்படுத்தவும், பெரிய அளவிலான உற்பத்திக்கு முழு தொழில்துறை சங்கிலியை நிறுவவும் சீன அமைச்சர் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் வூஹானில் முதன் முதலில் கொரோனா வைரஸ் உருவானது. தற்போது அங்கு 9 கோடி மக்களுக்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில் 83,540 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீனாவில் பாதிப்பு பதிவாகிறது. ஆனால் அதன் உண்மை தன்மை பற்றிய சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் சீன தொழில்துறை துணை அமைச்சர் வாங் ஜியாங்பிங், தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார். மருந்து உருவான உடன் பெரிய அளவில் தயாரிப்பதற்கு ஏற்ப தொழில்துறை சங்கிலியை நிறுவவும் உத்தரவிட்டுள்ளார்.


பீஜிங்கில் இயங்கி வரும் சினோவாக் நிறுவனம் மற்றும் பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. சினோவாக் கடந்த மாதம் அதன் தடுப்பூசியான 'கொரோனாவாக்' குறித்த ஆரம்ப தரவுகளை வெளியிட்டது. இந்த தடுப்பு மருந்தை இரண்டு முறை மனிதர்களுக்கு செலுத்தி 14 நாட்கள் கண்காணித்தனர். அவர்களில் 90% பேர் குறைந்த பக்க விளைவுகளுடன் நோயெதிர்ப்பு சக்தியை பெற்றனர். இது மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

சீன தேசிய மருந்துக் குழுவான சினோபார்ம் நிறுவனத்துடன் இணைந்து பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் என்ற நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து சாதகமான முடிவுகளை காட்டியதாக கூறியுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளில் உள்ள 1,120 தன்னார்வலர்களுக்கு இருமுறை இம்மருந்தை கொடுத்து கண்காணித்ததில் அவர்கள் கொரோனாவுக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 120 மில்லியன் டோஸ் உற்பத்தி திறன் கொண்ட உயர் மட்ட தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஏப்ரலில் அமைத்தது. இது கொரோனா வைரசுக்கான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி ஆலை ஆகும்.

மூலக்கதை