போட்ஸ்வானாவில் 2 மாதத்தில் 350 யானைகள் மர்ம மரணம்; வைரஸ் தாக்குதல் காரணமா?

தினமலர்  தினமலர்
போட்ஸ்வானாவில் 2 மாதத்தில் 350 யானைகள் மர்ம மரணம்; வைரஸ் தாக்குதல் காரணமா?

லண்டன்: தெற்கு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், கடந்த இரு மாதங்களில் மட்டும், 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழ்துள்ளன.


பிரிட்டனில் இருந்து இயங்கும், நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த டாக்டர் நியால் மெக்கேன் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே மாத துவக்கத்தில், ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல், விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது, யானைகளின் இறந்த உடல்களை, உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் பார்த்துள்ளனர். அதுகுறித்து, அந்நாட்டு அரசுக்கு அப்போதே தகவல் அளித்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மூன்று மணி நேரம் பறந்ததில், 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது; ஆபத்தானது.


வறட்சி காரணமில்லை!


அதன் பின், எனது குழுவினருடன் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தமாக 350க்கும் மேற்பட்ட யானைகளின் இறந்த உடல்களை கண்டோம். வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது.
'இறந்த யானைகளின் உடல்களில் தந்தம் இல்லை. யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம்' என, போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்துள்ளன.

வைரஸ் தாக்குதல்?


கடந்த ஆண்டு ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. தற்போதும், நச்சு அல்லது நோய் தாக்குதலால் யானைகள் உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து உயிரிழந்துள்ளன. உயிருடன் இருக்கும் யானைகள், வட்ட வடிவமான பாதையில் நடக்கின்றன. இதனால், யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்கியிருக்கக் கூடும். இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவ வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மனிதர்களையும் பாதிக்கும்!


'வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். இந்த நோய் யானைகளிடமிருந்து மனிதர்களையும் தாக்க வாய்ப்புள்ளது. இது, மனிதர்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை