பொய் செய்தியும் நண்பர்களின் தொந்தரவும் ; பாலா விரக்தி

தினமலர்  தினமலர்
பொய் செய்தியும் நண்பர்களின் தொந்தரவும் ; பாலா விரக்தி

ஒரு நடிகராக இருந்தாலும், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவின் தம்பி என்கிற விதமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார். தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து மலையாள நடிகராகவும் மாறி கிட்டத்தட்ட அங்கேயே செட்டிலாகி விட்டவர். தற்போது கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக சென்னை திரும்ப முடியாவில் அங்கேயே தங்கியுள்ளார்.

தனக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஏற்கனவே தனது மனையிடம் இருந்து பிரிந்து வாழும் பாலா, மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார் என ஒரு செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து பாலாவின் நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு போன்செய்து விசாரிக்க தொடங்கி விட்டார்கள்.. இதனால் கோபமும் விரக்தியும் அடைந்த பாலா ரொம்பவே வேதனையுடன் தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது : “கொரோனா காரணமாக இங்கிருந்து சென்னை செல்ல முடியவில்லை.. அங்கே என் அண்ணன் சிவா அருகில் இருந்தாலும் என் வயதான பெற்றோர் சென்னையில் தனியாகத்தான் இருக்கின்றனர். என்னுடன் போனில் உரையாடுவது தான் அவர்களுக்கு கொஞ்சமாவது மகிழ்ச்சி அளிக்கும். இந்தசமயத்தில் ஒரு இணையதளத்தில் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக உண்மைக்கு மாறான ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இதனை உண்மை என நம்பி என் நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என பலரும் விடாமல் போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் விசாரிக்கின்றனர். என்மீது அக்கறை கொண்டவர்கள் என்பதால் நானும் வேறு வழியின்றி அவர்களுக்கு பதில் சொல்லியே இரவு முழுதும் தூங்க முடியாமல் விடியற்காலை ஒரு கால்மணி நேரம் தூங்கினேன். ஆனால் அந்த சமயத்தில் தான் என் அம்மா எனக்கு போன் செய்துள்ளார்.. ஆனால் நான் தூங்கியதால் எடுக்க முடியவில்லை.. அந்த கால்மணி நேரம் அவர்கள் எப்படிப்பட்ட அவஸ்தையை அனுபவித்து இருப்பார்கள்..

வெகுதூரத்தில் என் பெற்றோர் இருக்க, அவர்களை பார்க்க முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலா இப்படி பொய் செய்திகளை வெளியிடுவது..? எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் என்னைப்பற்றி அறிந்திருந்தாலும் நண்பர்களும் உறவினர்களும் கூட அந்த செய்தியை நம்பி என்னை விசாரித்தது, இதெல்லாம் மேலும் வேதனையை தருகிறது.. தயவுசெய்து உங்கள் விளம்பரத்திற்காக பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்” என கூறியுள்ளார் பாலா..

மூலக்கதை