கொரோனா பாதிப்பு எதிரொலி....! அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 25% உயர்வு; கேரள அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு எதிரொலி....! அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 25% உயர்வு; கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் காரணமாக கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்களை 25% உயர்த்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில்துறை மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்கும் வகையில் கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டணங்களை 25% உயர்த்தி இடைக்கால உத்தரவு ஒன்றை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே சுசீந்திரன், போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதித்துறை ஆணையம், அளித்த பரிந்துரையின் பேரில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாக இருக்கும் எனவும் பேருந்து கட்டணம் 5 கிலோமீட்டருக்கு பதிலாக முதல் 2.5 கிலோமீட்டருக்கு கணக்கிடப்படும். என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் செயல்படாததால் மாணவர்களுக்கான சிறப்பு கட்டணங்களை மாற்ற வேண்டாம் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே அந்த கட்டணம் அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம், அதனால்தான் குறைந்தபட்ச தூரத்தை குறைத்தோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை