இந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை

ஐக்கிய நாடுகள் : பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா கொண்டு வந்த தீர்மானத்திற்கு, ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கடந்த ஜூன் 29 ல், பாகிஸ்தானின் கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் போலீசார், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் மெக்மூத் குரோஷி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மெக்மூத் குரோஷி தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.


இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், உதவி செய்தவர்கள், ஆதரவு அளித்தவர்களை இந்த சபையின் உறுப்பு நாடுகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டப்படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும், அனைவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுடன் , தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனமும் இரங்கலும் தெரிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தை நேற்று முன்தினம்(ஜூன் 31) சீனா கொண்டு வந்தது. இதனை நியூயார்க் நேரப்படி மாலை மணி வரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த தீர்மானம் நிறைவேறிவிடும். ஆனால்,திடீர் திருப்பமாக மாலை 4 மணிக்கு, இந்ததீர்மானத்திற்கு ஜெர்மனி தடை போட்டது.
இது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவை , குறைகூறும் பாகிஸ்தான் செயல் ஏற்று கொள்ள முடியாது எனக்கூறி தடை போட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன தரப்பு, காலக்கெடுவை தாண்டி ஜெர்மனி தலையிட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், காலக்கெடுவானது ஜூலை 1 காலை 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடைசி நேரத்தில் அமெரிக்காவும் அந்த தீர்மானத்திற்கு தடை போட்டுள்ளது. இதனை கண்டு, சீனாவும், பாகிஸ்தானும் ஏமாற்றமடைந்துள்ளன.

மூலக்கதை